PUBLISHED ON : செப் 29, 2025 12:00 AM

மார்க்சிஸ்ட் கம்யூ., அரசியல் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் பேட்டி:
நாடு முழுதும் திரைத்துறையினருக்கு கூட்டம் கூடுவது இயல்பு. அந்த வகையில்,
த.வெ.க., தலைவர் விஜய்க்கு கூட்டம் கூடுகிறது. ஓட்டுகளாக அது மாறும் என
முடிவு செய்ய முடியாது. விஜய் எந்த ஒரு ஆக்கப் பூர்வமான கொள்கைகளையும்
கூறவில்லை. சினிமாவில் வசனம் பேசுவது போல பேசுகிறார். அரசியல்
விழிப்புணர்வுடன் உள்ள இளைஞர்கள், இதை எப்படி ஏற்றுக் கொள்வர்?
விஜய், மத்தியில் ஆளும், பா.ஜ., அரசை கடுமையா எதிர்க்கிறாரே... அதிலும் கூட இவருக்கு உடன்பாடு இல்லையா?
தமிழக காங்கிரஸ் பொதுச்செயலர், எம்.எஸ்.காமராஜ் பேச்சு:
'கூட்டணி ஆட்சி மற்றும் அதிக தொகுதிகள் கேட்பதால், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டு விட்டது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என, பேசுகிறார். தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி, 2004ம் ஆண்டு முதல் வலிமை யான, வெற்றி கூட்டணியாக இருந்து வருகிறது.
ஆனா, 2014 லோக்சபா தேர்தலில், தி.மு.க., மற்றும், காங்., கட்சிகள் முறைச்சுக்கிட்டு தனித்தனியா போட்டியிட்டு, மண்ணை கவ்வியதை இவர் மறந்துட்டாரோ?
தமிழக வேளாண் துறை அமைச்சர், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சு:
சமூக நீதிக்காகவும், கொள்கைக்காகவும் போராடிய இயக்கம், தி.மு.க., தான். அப்போது அன்புமணி பிறக்கவேயில்லை. 2004ம் ஆண்டு மத்திய அரசில் சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை, பா.ம.க.,வுக்கு கொடுக்க வேண்டும் என கூறியதும், அன்புமணியை கை காட்டியதும் கருணாநிதி தான். அப்போது, தி.மு.க.,வின் தோள்கள் தான் அவரை துாக்கின. அன்புமணிக்கு, 'ஒரிஜினாலிட்டி' கிடையாது. இந்தப்பக்கம் போனால், அ.தி.மு.க., தோள். அந்தப்பக்கம் போனால், தி.மு.க., தோள். இனிமேல் அவரால், இப்படி, குதிரை சவாரி செய்ய முடியாது.
'ராமதாஸ் தலைமையிலான, பா.ம.க.,வுக்கு தான், தி.மு.க., கூட்டணியில் இடம்' என்று சூசகமா சொல்றாரோ?
புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி:
வரும் காலங்களில், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரம் கொடுக்க வேண்டும். த.வெ.க., தலைவர் விஜய், 'ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரம்' என தொடர்ந்து கூறி வருகிறார். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பதை வெளிப்படையாக அறிவிக்கக் கூடிய கட்சியுடன் தான் நாங்கள் கூட்டணி அமைப்போம்.
அப்படி என்றால், அ.தி.மு.க., - தி.மு.க., அணிகள் இவரை கிட்டயே சேர்த்துக்காது... விஜய் மனசு வச்சு சேர்த்தால் தான் உண்டு!