PUBLISHED ON : அக் 07, 2025 12:00 AM

இந்திய கம்யூ., மாநில செயலர் வீரபாண்டியன் பேட்டி: கரூர் சம்பவத்திற்கு விஜய் தான் தார்மீக பொறுப்பேற்றிருக்க வேண்டும். அந்த சம்பவத்தில், முதல்வர் ஸ்டாலின் உடனே கரூருக்கு சென்று, அனைத்து விதமான பணிகளையும் துரிதப்படுத்தினார். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, இந்த சம்பவத்தில் அரசியல் செய்கிறார். 2026 சட்டசபை தேர்தலில், விஜய் எந்த கூட்டணியில் இருந்தாலும் அந்த கூட்டணியை கண்டிப்பாக தோற்கடிப்போம்.
விஜய் கட்சியை தோற்கடிக்க தான், இந்திய கம்யூ., கட்சி உருவாக்கப்பட்டது போல பேசுறாரே!
தமிழக காங்., முன்னாள் தலைவர் அழகிரி பேட்டி: கரூர் நெரிசல் பலிகள் போன்ற விபத்து, வருங்காலங்களில் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அரசியல் ரீதியாக யாரையும் யாரும் பழிவாங்குவதற்கோ அல்லது ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வதற்கோ ஏற்ற தருணம் இது அல்ல. விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டால், கரூர் கலெக்டர், எஸ்.பி., ஆகியோர் மீதும் வழக்கு பதிய வேண்டும். விஜய்க்கு எவ்வளவு கூட்டம் வரும் என்று அவர்களுக்கு தெரியும். அதற்கு ஏற்ற இடத்தை அவர்கள் வழங்கியிருக்க வேண்டும்.
'விஜய் மீதும் வழக்கு பதியணும்' என்ற திருமாவளவன் கருத்துக்கு பதிலடி தர்றாரே... இதன் பின்னணியில் ராகுல் இருப்பாரோ?
ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி: ஆர்.எஸ்.எஸ்., என்ற பெயரை உச்சரிக்க தி.மு.க.,வுக்கு யோக்கியதை உண்டா? கரூரில் நடந்த கொடூர நிகழ்வுக்கு இடையே ஆம்புலன்சில் தி.மு.க., பெயரை ஒட்டியும், தண்ணீர் பாட்டிலில் அமைச்சர் பெயரை ஒட்டியும் கொடுத்த தி.மு.க.,வினருக்கு, தன்னலம் பாராமல் உழைத்த ஆர்.எஸ்.எஸ்.,சின் அருமை தெரியாது. எவ்வித விளம்பரமும் இன்றி கடமையை செய்பவர்கள் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர்.
ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு தனியா விளம்பரமே தேவையில்லை... இந்த மாதிரி, அவங்க எதிரிகளின் விமர்சனமே, அவங்களுக்கு அருமையான விளம்பரமா அமையுது!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு: காமராஜருக்கு முன், நாம் எல்லாம் கல்வி மறுக்கப்பட்ட சமூகமாக இருந்தோம். குலத்தொழில் முறை இருந்தது. காமராஜர் முதல்வராக பதவியேற்றதும், 6,000 பள்ளிகளை திறந்தார். தெருவுக்கு தெரு பள்ளிகளை திறந்து கல்வி வளர்த்த காமராஜர் ஆண்ட தமிழகத்தில், தெருவுக்கு தெரு, 'டாஸ்மாக்' கடைகளை திறந்து மக்களை 'குடி'காரர்க ளாக மாற்றியது தான், திராவிட கட்சிகள் ஆட்சியின்சாதனை.
'டாஸ்மாக்' ஊழல் பற்றி பேசும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூட, 'நாங்க ஆட்சிக்கு வந்தால் அதை இழுத்து மூடுவோம்'னு பேச மாட்டேங்கிறாரே!