PUBLISHED ON : அக் 08, 2025 12:00 AM

அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர் டாக்டர் சரவணன் அறிக்கை:
கச்சத்தீவு குறித்து முதல்வர் ஸ்டாலின் தற்போது நீலிக்கண்ணீர்
வடிக்கிறார். 1996 முதல் 2013 வரை , இடையில் 13 மாதங்கள் தவிர, மத்திய
அரசில் தி.மு.க., அங்கம் வகித்தது. அப்போது, கேட்ட துறைகளை கொடுக்காத
மத்திய அரசை, 'ஆதரவு தர மாட்டோம்' என மறைமுகமாக மிரட்டி, விரும்பிய துறைகளை
பெற்றனர். உண்மையி லேயே மீனவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால்,
'கச்சத்தீவை மீட்க உறுதியாக நடவடிக்கை எடுப் போம் என்று கூறினால் தான்
உங்களுக்கு ஆதரவளிப்போம்' என்று தி.மு.க., கூறியது உண்டா?
கச்சத்தீவு மட்டுமா...? தி.மு.க., நினைச்சிருந்தால், காவிரி, முல்லை
பெரியாறு பிரச்னைகளுக்கு கூட இப்படி நிபந்தனை விதித்து தீர்த்திருக்கலாமே!
ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி: கரூர் மரணத்திற்கு நீதி வேண்டும். த.வெ.க., கட்சியை தடை செய்ய வேண்டும். அந்த கட்சி நடத்திய அனைத்து நிகழ்ச்சி களும், பொதுமக்களுக்கு இடையூறாகவே அமைந்திருந்தன. அதனால், அந்த கட்சியின் அந்தஸ்தை ரத்து செய்து, விஜயை கைது செய்ய வேண்டும். கரூர் பலிகளுக்கு தி.மு.க., அரசும் காரணம் என்பதால், அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
விஜய் கட்சியை தடை பண்ணி, தி.மு.க., ஆட்சியை டிஸ்மிஸ் பண்ணிட்டு தேர்தல் நடத்தினால், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஈசியா ஜெயிச்சிடும்னு நம்புறாரோ?
தமிழக பா.ஜ., செயலர் அஸ்வத்தாமன் அறிக்கை: உண்மையில் தமிழகம், தி.மு.க.,வை எதிர்த்து தான் போராடி கொண்டிருக்கிறது. தமிழகம் இதுவரை சந்தித்திராத ஒரு கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக, தமிழக மக்கள் தவித்து கொண்டிருக்கின்றனர்; அதற்கு முடிவு கட்ட போராடி வருகின்றனர். வரும் சட்டசபை தேர்தலில், தமிழகம் அந்த போராட்டத்தில் வெல்லும்.
ஆட்சியை தக்கவைக்க ஆளுங்கட்சியினரும், ஆட்சியை பிடிக்க எதிர்க்கட்சியினரும் போராட்டம் நடத்துறாங்க... இதுல யார் வென்றாலும், தோற்கப் போவது என்னவோ மக்கள் தான்!
மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன் பேட்டி: பிரதமர் மோடி, 2014-ல் ஆட்சி அமைத்த பின், ஒரு மீனவர் மீது கூட துப்பாக்கிச் சூடு இல்லை. அந்த அளவிற்கு, பிடித்து செல்லப்பட்ட மீனவர்களை பாதுகாத்தும், உடனடியாக விடுவித்தும் வருகிறோம். மேலும், ஐந்து மீனவர்களை துாக்கு தண்டனையில் இருந்து மீட்டு வந்த பெருமை பிரதமர் மோடியை சேரும். இதையெ ல்லாம் மறந்துவிட்டு அரசியல் நோக்கத்துக்காக மத்திய அரசை, முதல்வர் ஸ்டாலின் குறை கூறி வருகிறார்.
மீனவர்களை பிடிச்சுட்டு போன பிறகு விடுவிப்பதை விட, பிடிக்காமலேயே தடுக்க நடவடிக்கை எடுக்கலாமே!