PUBLISHED ON : அக் 18, 2025 12:00 AM

கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி பேட்டி: கரூர் நெரிசல் பலிகள்
தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பில், எனக்கு ஒரு சின்ன நெருடல் உள்ளது.
'குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் இந்த விசாரணையை முடித்து,
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும்' என, அந்த தீர்ப்பில் எங்கும்
இல்லை. எனவே, இந்த விசாரணையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்க
வேண்டும் என்ற வாதத்தை, தமிழக அரசு முன் வைக்க வேண்டும். கரூர்
சம்பவத்தில், ஆளுங்கட்சியினர் மீது தவறு இருந்தால், அவங்க சீக்கிரமே,
'உள்ள' போகணும்னு இவங்க நினைக்கிறாங்களோ?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழகத்தில் சமீப காலமாக, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த மாதம், தஞ்சை மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில், நாட்டு வெடிகுண்டை வீசி, பேரூராட்சி தலைவரை கொல்ல முயற்சித்தனர். நெல்லை தச்சநல்லுார் போலீஸ் நிலையம் மீது, பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி, தமிழகத்தில் போதிய பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்பதை காட்டுகிறது.
போலீஸ் ஸ்டேஷன் மீதே குண்டு வீசும் காட்சிகளை எல்லாம், தெலுங்கு சினிமாக்களில் மட்டுமே பார்த்துள்ள தமிழக மக்களுக்கு, இது பயங்கர அதிர்ச்சிதான்!
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலர் சம்பத்குமார் அறிக்கை: அநீதியின் குரல் ஆரம்பத்தில் ஓங்கி ஒலிக்கும்; ரத்த முழக்கத்துடன் ஆர்ப்பரிக்கும். ஆனால், ஒருசில நாட்களில் அது ஓய்ந்து போய் மவுனமாகி தோற்றுப்போகும். நீதியின் குரல் மெதுவாக மென்மையாக ஒலிக்கத் தொடங்கும். ஆனால், இறுதியில் உறுதியாக, உண்மையை வெளிப்படுத்தி வென்று காட்டும்; நீதி வெல்லும்.
யாருக்கு இதை சொல்றாரு...? ஆர்ப்பாட்டமா கட்சி ஆரம்பிச்சு, நாலஞ்சு பிரசார கூட்டங்களை பிரமாண்டமா நடத்தி, கரூர்ல, 41 பேர் பலியானதும் அமைதியா வீட்டுக்குள்ள முடங்கிட்ட விஜயை சுட்டிக்காட்டுறாரா?
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேட்டி: தி.மு.க., - எம்.பி.,யான டி.ஆர்.பாலு, என் மீது அவதுாறு வழக்கு தொடர்ந்து உள்ளார். கோர்ட்டில் நானே ஆஜராகி, என் தரப்பு வாதங்களை முன்வைக்கப் போகிறேன். அடுத்த குறுக்கு விசாரணை, நவ., 11ல் நடைபெற உள்ளது. நிச்சயமாக நீதி வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. டி.ஆர்.பாலு அரசியலுக்கு வந்த காலம் முதல், குழந்தைகளை படிக்க வைத்தது, நிறுவனம் தொடங்கியது என, 42 ஆண்டுகால வரலாற்றை நீதிபதி முன்பும், சமூகத்தின் முன்பும் வைக்க உள்ளேன்.
'ஏன்டா இவர் மீது வழக்கு தொடர்ந்தோம்'னு டி.ஆர்.பாலுவை நோக அடிச்சிடுவார் போலிருக்கே!

