PUBLISHED ON : அக் 24, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா அறிக்கை: வேளச்சேரி
சட்டசபை தொகுதிக்கு, நான் பொறுப்பாளராக இருந்த போது நடந்த மாநகராட்சி
தேர்தலில், 8 வார்டுகளில், 15,000 ஓட்டுகளை பா.ஜ., பெற்றது. லோக்சபா
தேர்தலில் தீவிரமாக பணியாற்றியதால், அத்தொகுதியில் மட்டும் 51,000 ஓட்டுகள்
கிடைத்தது. வேளச்சேரி தொகுதியை பலப்படுத்தியது போலவே, தமிழகத்தின்
மிகப்பெரிய தொகுதியான, 7 லட்சம் வாக்காளர்களை கொண்ட சோழிங்கநல்லுார்
தொகுதியை பலப்படுத்தும் நோக்கில், என்னை இத்தொகுதியின் பொறுப்பாளராக்கிய
கட்சி தலைமைக்கு நன்றி. 'வர்ற சட்டசபை தேர்தலில், போட்டியிட வேளச்சேரி
இல்லன்னா, சோழிங்கநல்லுாரையாவது தாங்க'ன்னு தலைமையிடம் நாசுக்கா
கேட்கிறாரோ?
தமிழக காங்., கலை பிரிவு அணியின் துணை தலைவர் அசோக்குமார் பேச்சு: தொடர்ந்து, 15 ஆண்டுகளாக தி.மு.க., கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, 'ஆட்சியில் பங்கு வேண்டும். அதிகாரத்தில் பங்கு வேண்டும். உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்' என்ற கோஷத்தை முன் வைக்கிறது. இவ்விவகாரத்தில், பீஹார் தேர்தலுக்கு பின் ராகுல் நல்ல முடிவை எடுப்பார்.
பீஹார் தேர்தலில், காங்., கூட்டணி தோல்வி அடைஞ்சுட்டா, 2021ல் கொடுத்த சீட்களையும் தி.மு.க., குறைச்சிடும்!
தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிக்கை: கடந்த, 10 ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் அளவு, 1.80 கோடி டன். ஆனால், 53 மாத தி.மு.க., ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் அளவு 1.94 கோடி டன். ஞாயிற்றுகிழமைகள், விடுமுறை நாட்கள், தீபாவளி நாளிலும் கூட, நெல் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டு, கொள்முதல் நடந்திருக்கிறது.
அதே மாதிரி, அ.தி.மு.க., ஆட்சியில் மழையில் நனைந்து வீணான நெல் அளவு, இவங்க ஆட்சியில் வீணான நெல் அளவையும் அமைச்சர் குறிப்பிட்டிருக்கலாமே!
சேலம் மேற்கு தொகுதி பா.ம.க., - எம்.எல்.ஏ., அருள் பேட்டி: பெற்றெடுத்த தந்தை, கட்சி நிறுவனர் என்றும் பார்க்காமல், ராமதாசை எதிர்த்து சில வருந்தத்தக்க செயல்களை, அன்புமணி செய்து வருகிறார். தற்போது, பா.ம.க.,வின் அடிப்படை உறுப்பினராக கூட அன்புமணி இல்லை. ஆயினும், உட்கட்சி பிரச்னையை, சட்டசபையில் பேச சொல்வது உள்ளிட்ட பிரச்னைக்குரிய செயல்களில், அன்புமணி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சாது.
அன்புமணிக்கு எதிரா ஆவேசமா பேசுறாரே... நாளைக்கே, அப்பாவும், மகனும் ஒன்றுகூடிட்டா இவருக்கு சிக்கல் வராதா?

