PUBLISHED ON : அக் 26, 2025 12:00 AM

தமிழக துணை முதல்வர் உதயநிதி பேச்சு: தற்போது சோஷியல் மீடியா,
'டிவி'க்கள் அதிகம் உள்ளன. மக்களுக்கு பிரச்னை இருந்தால் களத்திற்கு
சென்று, உண்மை நிலவரத்தை மக்களுக்கு சொல்ல வேண்டும். உள்ளாட்சி
பிரதிநிதிகள், தங்கள் பகுதி மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்.
அவர்களின் நம்பிக்கையை பெற வேண்டும். மழை காலத்தில் முதியோர், பெண்கள்,
குழந்தைகள் பாதுகாப்பு முக்கியம். அவர்களுக்கு முதல் முன்னுரிமை
வழங்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். பல இடங்களில் மழையால
பாதிக்கப்பட்ட மக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளை தான் தேடிட்டு இருக்காங்க...
இவர், அவங்களை வம்படியா போய் மாட்டிக்க சொல்றாரே!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: காவிரி டெல்டா மாவட்டங்களில் வழக்கத்தை விட, நடப்பாண்டில் நெல் விளைச்சல் அதிகம். எனவே, நெல் கொள்முதல் செய்ய தேவையான முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்வதில், தமிழக அரசு படுதோல்வி அடைந்து விட்டது. கொள்முதல் நிலையங்களுக்கு முன்பாக மழையில் நனைந்த நெல்லுடன், விவசாயிகள் தவம் கிடக்கும் அவல நிலை இன்னும் நீடிக்கிறது.
மழை பெய்யாமல் போனாலும் சரி; பெய்தாலும் சரி... பாதிக்கப்படுவது என்னமோ விவசாயிகள் தான்!
அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., இன்பதுரை அறிக்கை: பைசன் படத்தின் நிஜ நாயகனான மணத்தி கணேசன் உள்ளிட்ட மூன்று கபடி வீரர்களுக்கு, 1994ல், தலா, 1 லட்சம் ரூபாயோடு, வீடும் வழங்கி உதவியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதுபோல விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில், 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கியவர், முன்னாள் முதல்வர் பழனிசாமி. இந்த வரலாற்று உண்மைகளை மறைக்காமல் படத்தில், இயக்குநர் மாரி செல்வராஜ் சொல்லி இருந்தால், வரலாற்றுக்கும் வலி இருந்திருக்காது.
முன்னாள் முதல்வர்கள் புகழ்பாடியிருந்தால், பைசன் படமே வெளியாகி இருக்காதே!
காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம் அறிக்கை: கர்நாடக தலைநகர் பெங்களூரில், சில சாலைகளின் மேம்பாட்டிற்கு நிதியளிக்க, 'பயோகான்' நிறுவன தலைவர் கிரண் மஜும்தார் ஷா முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது. கிரண் மஜும்தார் ஷாவின் யோசனையை, அரசு மாற்றி அமைக்கலாம். பொது பணிகளுக்கு பணம் ஒதுக்கி, 'டெண்டர்' விட்டு, ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்ட பின், 'பயோகான்' போன்ற விருப்பமுள்ள தனியார் நிறுவனம் அல்லது தொ ழிலதிபரின் மேற்பார்வையில், அந்த பணிகளை ஒப்படைத்து விடலாம்.
பணிகளை மேற்பார்வையிடும் வேலையை தனியாரிடம் ஒப்படைச்சுட்டா, ஆளுங் கட்சியினருக்கும், அரசியல் வாதி களுக்கும், 'தம்பிடி காசு' கூட தேறாதே!

