PUBLISHED ON : அக் 30, 2025 12:00 AM

தமிழக காங்., மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி: விஜய்க்கு
இளைஞர்கள் மத்தியில் ஒரு, 'கிரேஸ்' இருக்கிறது. ஹைட்ரஜனை எரிபொருளாக எப்படி
உடனே மாற்ற முடியாதோ, அதுபோல இது அரசியல் சக்தியாக மாறுமா, அதற்கு அவர்கள்
தகுதியானவர்களா, அத்தகைய கட்டமைப்பு அவர்களிடம் இருக்கிறதா என்பது எனக்கு
தெரியவில்லை. விஜயிடம், ராகுல் பேசியபோது, ஆறுதல் சொல்லி இருக்கிறார்; இதை,
அரசியல் ரீதியாக பார்க்க வேண்டியது இல்லை. ராஜஸ்தான்லயும், ஆந்திராவுலயும்
சமீபத்துல பஸ்கள் எரிஞ்சு, 40 பேருக்கு மேல உயிரிழந்தாங்களே... அந்த மாநில
முதல்வர்களுக்கு எல்லாம், ராகுல் ஏன் ஆறுதல் கூறலை?
பா.ம.க., அன்புமணி அறிக்கை: தமிழக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பதவிக்காலம், நவ., 16ம் தேதியுடன் முடிகிறது. சமூக நீதியை பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஆணையம், சமூக நீதியை படுகொலை செய்யும் அரசின் சதிகளுக்கு துணை போனதும், கொடுக்கப்பட்ட கடமைகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றாததும், அதன் தோல்வியை மட்டுமின்றி, துரோகத்தையும் காட்டுகிறது.
இவர் கேட்கும், வன்னியருக் கான, 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆணையம் பரிந்துரை பண்ணி இருந்தா, அதை, 'ஆஹா... ஓஹோ...'ன்னு புகழ்ந்து தள்ளி இருப்பாரு!
தி.மு.க., செய்தி தொடர்பு இணை செயலர் மருது அழகுராஜ் அறிக்கை: திரைகடலோடி திரவியம் தேடி, 10.80 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அந்நிய முதலீடுகளை ஈர்த்து, வேலை வாய்ப்புகளை பெருமளவில் உருவாக்கி, விளைநிலங்களின் பரப்பளவை இரட்டிப்பாக்கி, இதுவரை இல்லாத அளவுக்கு குறுவை மற்றும் நெல் சாகுபடி அளவை உயர்த்தி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை விட, தமிழகத்தின் வளர்ச்சியை இரட்டிப்பாக்கிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தை வழிநடத்துகிறார். இதற்கு மக்கள் தரப்போகும் மகுடம்தான், 2026லும் தொடரப்போகும் வெற்றி.
குறுவை சாகுபடியை உயர்த்தி என்ன புண்ணியம்... விளைந்த நெல்மணிகளை மழையில் நனையவிட்டு முளைக்க விட்டுட்டாங்களே!
தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'மக்களின் ஓட்டுரிமையை பறிக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி எனும் சதி வலையை, தமிழகத்திலும் விரிக்க, பா.ஜ., ஆயத்தமாகி விட்டது. விழிப்புடன் இருந்து, கருப்பு - சிவப்புக்காரர்கள், தமிழகத்தின் காவலுக்கு கெட்டிக்காரர்கள் என காட்ட வேண்டிய நேரமிது' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜனநாயக விரோதமாக இயங்கிய போலி வாக்காளர்கள், இரட்டை ஓட்டுரிமை, இறந்தவர்களின் ஓட்டு என, இதுவரை இருந்த சதி வலையை தகர்த்தெறிந்து, சீர்திருத்தத்தை ஏற்பதற்கு மனமில்லாமல் முதல்வர் புலம்புகிறார்.
வாக்காளர் பட்டியலை திருத்திட்டா, இறந்தவங்க எல்லாம் தேர்தல் நாளில் உயிர் பெற்று வருவதற்குமுற்றுப்புள்ளி விழுந்துடுமே!

