PUBLISHED ON : நவ 03, 2025 12:00 AM

அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர் டாக்டர் சரவணன் அறிக்கை: 
அமைச்சர் நேரு வசம் உள்ள நகராட்சி நிர்வாக துறையில், '5,000 கோடி 
ரூபாயில், சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை செய்துள்ளோம்; ஒரு சொட்டு 
நீர் கூட தேங்காது' என்றனர். ஆனால், ஒரு மழைக்கே சென்னை தத்தளித்தது. 
மழைக்காலங்களில் பிளீச்சிங் பவுடர் போடுவதற்கு பதிலாக மைதா மாவு போட்டு, 
ஊழல் செய்தனர். தற்போது, 2,538 பணியாளர்கள் நியமனத்தில் மிகப்பெரிய ஊழல் 
நடந்துள்ளது. 30 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 
காத்திருக்கின்றனர். ஆனால், பணத்துக்கு தான் வேலை; படிப்புக்கு வேலை இல்லை 
என்ற நிலையை தி.மு.க., அரசு உருவாக்கி உள்ளது.
பணத்துக்கு தான் அரசு வேலை என்றால், தேர்வாணையங்கள் எல்லாத்தையும் இழுத்து மூடிடலாமே!
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: '
பிரசவ தேதி நெருங்கிய கர்ப்பிணியரை கண்டறிந்து, முன்கூட்டியே அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, பொது சுகாதாரத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் வேலுார், திருவண்ணாமலை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பெரும்பாலான அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், 50 சதவீதத்துக்கும் மேலாக மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதை, அரசு கண்டுகொள்ளவில்லை.
மற்ற துறைகளில் எல்லாம், 100 சதவீதம் மருத்துவர்கள் பணியில இருக்காங்களா, என்ன?
தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: '
கண்ணை கட்டிக்கொண்டு கிணற்றில் விழ வேண்டும் என, பா.ஜ., சொன்னாலும், அதை ஏற்று செயல்படும் சுய சிந்தனையற்ற மனிதராக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மாறி விட்டார்' என, மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம் கூறியுள்ளார். கோடிக்கணக்கான பணத்திற்காக, கண்களை திறந்து கொண்டே, காட்டாற்று வெள்ளத்தில் குதிக்கும் சுய புத்தியும், சொல் புத்தியும் இல்லாத, தி.மு.க.,வின் அடிமைகளான கம்யூனிஸ்ட்கள் இப்படித்தான் பேசுவர்.
காட்டாற்று வெள்ளத்தில் குதிச்சாலும், தி.மு.க., என்ற கட்டுமரம் மூலம் பாதுகாப்பா கரை ஏறிடுறாங்களே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு:
தி.மு.க., ஆட்சியில், துாய்மை பணியாளர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை ஏமாற்றப்பட்டு, ஏமாற்றத்தின் விளிம்பில் உள்ளனர். மக்கள் விரக்தியில் உள்ளதால், 2026 சட்டசபை தேர்தல் தி.மு.க.,விற்கு சோதனையான தேர்தலாகவும், அ.தி.மு.க., விற்கு சாதனையான தேர்தலாக இருக்கும்.
சாதனை படைக்கல என்றாலும் பரவாயில்லை... மறுபடியும் தோற்று போய், தொண்டர்களை வேதனையில தள்ளிடாதீங்க!

