PUBLISHED ON : நவ 08, 2025 12:00 AM

தமிழக காங்., பொதுச்செயலர் விஜய்வசந்த் எம்.பி., அறிக்கை:
தேர்தல் ஆணையம்,
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை துவங்கியுள்ளது. இந்த
பணியின் போது வாக்காளர்கள், கவனக்குறைவால் தங்கள் ஓட்டுரிமையை பறிகொடுத்து
விடக் கூடாது. காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும், தங்கள் ஓட்டுச்சாவடி மற்றும்
வாக்காளர்கள் இல்லங்களுக்கு சென்று, பொது மக்களுக்கு படிவங்களை பூர்த்தி
செய்யவும், அவர்கள் தெரிவிக்கும் புகார்களை நிவர்த்தி செய்யவும் உறுதுணையாக
இருக்க வேண்டும்.
அது சரி... எப்பவுமே, நோகாம நுங்கு தின்ன பார்க்கும்
இவரது கட்சியினர், தெரு தெருவா அலைவாங்களா?
தமிழக மாணவர் காங்., தலைவர் சின்னதம்பி பேட்டி:
கோவையில், மாணவிக்கு நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம், மனதை பதற செய்கிறது. இது, மனிதநேயத்தையும், சமூக மரியாதையையும் சிதைக்கும் குற்றம். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாதிரியான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, நகரங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் இரவு நேர கண்காணிப்பை வலுப்படுத்தி, மாணவியருக்கான மையங்கள் மற்றும் உதவி எண்கள் சிறப்பாக செயல்படுவதற்குரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.
என்னதான் அரசு நடவடிக்கை எடுத்தாலும், தனி மனித ஒழுக்கத்தை எல்லாரும் கடைப்பிடிக்கணும்!
ஐ.நா., சபையில், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., வில்சன் பேச்சு:
ஐ.நா., அமைதிப்படை நடவடிக்கைகளில், இந்தியா ஒரு முன்னணி பங்களிப்பாளராக உள்ளது. அமைதியை உருவாக்குவதற்கும், நிலை நிறுத்துவதற்கும், பெண்களின் முழுமையான மற்றும் சமமான பங்கேற்பு இன்றியமையாதது என்பதை இந்தியா வலியுறுத்துகிறது. தேசிய அளவில், பெண்கள் முன்னேற்றத்தில் இருந்து, பெண்கள் தலைமையிலான முன்னேற்றம் என்ற இந்தியாவின் பயணம், எங்கள் சமூகத்தின் ஒவ்வொரு துறையையும் மாற்றியுள்ளது.
ஆனா பாருங்க... தமிழகத்தில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுது!
விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா பேச்சு:
என் தொகுதி மக்களுக்கு சின்ன சின்ன கோரிக்கைகள் நிறைவேறாமல் இருக்கலாம்; அவற்றையும் நிச்சயமாக செய்து தருவேன். வாக்காளர்கள், உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு போடுவதை தொடர வேண்டும். அப்போது தான், அரசு பஸ்களில் மகளிர் இலவச பயணம் தொடரும்; மகளிர் உரிமைத்தொகை வரும். முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் தொடரும்.
இதை விடவும் அதிக இலவசங்கள், சலுகைகள் தருவதா எதிர்க்கட்சி கூட்டணி வாக்குறுதி தந்துட்டா, தி.மு.க., பாடு திண்டாட்டமாகிடாதா?

