PUBLISHED ON : நவ 25, 2025 12:00 AM

விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலர் வன்னியரசு பேச்சு: வரும் சட்டசபை தேர்தலில், 10க்கும் மேற்பட்ட தொகுதிகளை கூட்டணியில் கேட்டு பெறுவது எங்களின் விருப்பம். போராடக்கூடிய வி.சி.,க்கள் அதிகமாக சட்டசபை செல்வது தமிழகத்திற்கு நல்லது. ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்ற நிலைப்பாடு அப்படியேதான் உள்ளது; அதை கைவிடவில்லை. ஆனால், வரும் தேர்தலில் முதன்மையான இலக்கு, இரட்டை இலக்கத்தில்
தொகுதிகளை கேட்டு பெறுவது தான்.இரட்டை இலக்கத்தில் என்றால், 99 தொகுதிகளை கேட்பாங்களோ?.
தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் கடைகளில், உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக, வேளாண் துறை தெரிவித்தாலும், கள நிலவரம் முற்றிலும் முரணாக உள்ளது. சாகுபடி நேரத்தில் யூரியா இருப்பு இல்லை என்ற சூழ்நிலை உருவாகி உள்ளதால், விவசாயிகள் செய்வதறியாது திகைக்கின்றனர். முதல்வர் இதில் தனி கவனம் செலுத்தி, தமிழகத்தில் யூரியா தட்டுப்பாட்டை போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'கட்சியினருடன், 'ஒன் டூ ஒன்' சந்திப்பில் தீவிரமாக இருக்கும் முதல்வர், விவசாயிகள் பிரச்னையையும் கொஞ்சம் கவனிச்சா நல்லாயிருக்கும்'னு சொல்றாரோ?
விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை பொதுச் செயலர் சந்திரசேகரன் பேட்டி: தமிழக அய்யப்ப பக்தர்கள், ஒரு மண்டலம் விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று வருகின்றனர். சில ஆண்டுகளாக கேரள மார்க்சிஸ்ட் அரசு, அய்யப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்ய தவறி வருகிறது. அங்குள்ள தேவசம் போர்டும் வருமானம் ஈட்டுவதிலேயே குறியாக உள்ளதே தவிர, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யவில்லை; இது, ஹிந்துக்களை மன வேதனை அடைய வைத்துள்ளது. வருங்காலங்களில் பக்தர்கள் எளிதாக சென்று அய்யப்பனை தரிசனம் செய்து, திரும்பும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க., அரசும் அலட்சியம் காட்டாமல் கேரளா அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் மற்றும் கேரளா அரசுகளின் தலைமைக்கும், கடவுள் பக்திக்கும் ரொம்ப துாரம் என்பதால், இந்த பிரச்னை இப்போதைக்கு தீராது!
தமிழக பா.ஜ., துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் பேட்டி: தி.மு.க.,வை
ஆதரித்த குற்றத்திற்காக பிராயச்சித்தம் தேட, ம.தி.மு.க., பொதுச் செயலர்
வைகோ, போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர நடைபயணம்
மேற்கொள்கிறார். முதல்வர் ஸ்டாலின், அந்த நடைபயணத்தை தொடங்கி வைக்க
இருப்பது வெட்கக் கேடானது.
தன் அரசுக்கு எதிராக நடைபயணம் போகும் வைகோ பற்றி, முதல்வரே கவலைப்பட்ட மாதிரி தெரியலையே!

