PUBLISHED ON : நவ 30, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா பேச்சு: தி.மு.க., 70
சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதை, அனைத்து மக்களையும் சந்தித்து
நாம் விளக்க வேண்டும். தி.மு.க., தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு
வந்ததாக சரித்திரம் இல்லை. ஆகையால், அடுத்து ஆட்சிக்கு வருவது, தே.ஜ.,
கூட்டணி தான். கூட்டணி கட்சிகளுடன் இணைந்து, இளைஞரணியினர் சிறப்பாக செயல்பட
வேண்டும். விரைவில் இளைஞரணி மாநாடு நடத்தப்படும். இதில், 1 லட்சம்
இளைஞர்களை திரட்ட திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு இந்த
மாநாடு உறுதுணையாக இருக்கும்; மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க
வாய்ப்புள்ளது. தி.மு.க., இளைஞரணிக்கு நிகராக, தமிழக பா.ஜ., இளைஞரணியும்
தீயாக வேலை பார்த்தால் தான், ஆட்சி மாற்றம் என்ற கனவு நனவாகும்!
தி.மு.க., கொள்கை பரப்பு செயலர் திண்டுக்கல் லியோனி பேச்சு: தற்போது, 1,000 மத யானைகள் கிறுக்கு பிடித்து, தி.மு.க.,வை அழிக்க புறப்பட்டாலும், தி.மு.க., மக்களுக்கு கொடுத்த அறிவு என்ற ஆயுதமும், மக்களை பயிற்றுவித்துள்ள கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற சிந்தனைகளும், இந்த மத யானைகளை அடித்து நொறுக்கும் ஆயுதங்களாக மாறும். தமிழகத்தில் தி.மு.க., ஏழாவது முறையாக ஆட்சியை பிடிக்கும்.
விஜய் கட்சி கொடியில் தான் யானை சின்னம் இருக்கு... அந்த கட்சியை, 1,000 மத யானைகள் பலத்துடன் ஒப்பிட்டு அநாவசியமா பயப்படுறாரோ?
தமிழக சிறுகுறு நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் பேச்சு: தற்போது அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. செங்கோட்டையன், விஜய் கட்சியில் இணைந்துள்ளார். யார், எந்த பக்கம் போனாலும் பரவாயில்லை... மக்கள் நம் பக்கம் தான் உள்ளனர். தி.மு.க., தவிர யாருக்கும் ஓட்டு போட மாட்டார்கள்.
தேர்தலில் தாங்கள் அள்ளிவிட போகும் பணம், பரிசுகளால, தி.மு.க., தவிர மக்கள் வேற எந்த கட்சிக்கும் ஓட்டு போட மாட்டாங்கன்னு நம்பிக்கையா இருக்காரோ?
சேலம் மேற்கு தொகுதி, பா.ம.க., - எம்.எல்.ஏ., அருள் பேட்டி: தொண்டர்களாக இருந்த எங்களுக்கு இவ்வளவு பதவி, பொறுப்புகளை வழங்கிய ராமதாஸ் உடன் இருப்பது துரோகமா அல்லது பணம் சம்பாதித்து விட்டு, தற்போது வெளியே சென்று, ராமதாஸ் ஆதரவாளர்களை தாக்க முயற்சிப்பது துரோகமா? ரவுடித்தனம் மற்றும் அநாகரிக அரசியலை அன்புமணி கோஷ்டியினர் செய்து வருகின்றனர். அன்புமணி கட்டுப்பாட்டில், அவரது ஆதரவாளர்கள் இல்லை அல்லது அவரே ஊக்கு விக்கிறார் என்றுதான் பொருள்.
'அன்புமணி ரவுடித்தனம் பண்றார்'னு சொல்ற இவரது கருத்தை, அவரது தந்தை ராமதாஸ் ஏற்றுக் கொள்வாரா?

