PUBLISHED ON : டிச 11, 2025 03:26 AM

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர், பெங்களூருவை சேர்ந்த புகழேந்தி
அறிக்கை:
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், 'நான் புது கட்சி துவங்க
மாட்டேன்; அப்படி நான் சொல்லவே இல்லை' என, கூறியுள்ளார். ஆனால், அவர்
முன்னிலையில், அவரின் கூட்டாளியான, முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம்,
'நாங்கள் நடத்தி வரும், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு,
விரைவில் கட்சியாக மாறும்' என்று கூறியுள்ளார். சமீபத்தில், மத்திய உள்துறை
அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, அமித் ஷாவை சந்தித்து பேசிய பின்,
பன்னீர்செல்வம் நடவடிக்கையும் முன்னுக்கு பின் முரணாகவே இருக்கிறது.
இவரும்
ஒரு தடவை, டில்லி போயிட்டு வந்தால், தன் நிலையில் இருந்து கண்டிப்பா
மாறிடுவார்!
எம்.ஜி.ஆர்., மக்கள் இயக்க தலைவர், கா.லியாகத் அலிகான் அறிக்கை:
'திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்றும் பிரச்னையில், சிறுபான்மையினர் ஓட்டுகளை பெற, தி.மு.க., அரசு முயற்சிக்கிறது' என, சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால், தன் நடுநிலையான போக்கால், சரியாக முடிவெடுத்த முதல்வர் ஸ்டாலினை, தமிழக மக்கள் பாராட்டுகின்றனர்.
ஹிந்துக்கள் சாதுவானவங்க; கோபப்பட மாட்டாங்க என்று தானே, ஹிந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காம, தி.மு.க.,வினர் ஆட்சி நடத்துறாங்க! தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி எம்.பி., அறிக்கை: 'அயோத்தி நகரம், பிரிட்டன் நாட்டில் இல்லை; இந்தியாவில் தான் உள்ளது. எனவே, தமிழகம் அயோத்தி போல மாறுவதில் எந்த தவறும் இல்லை' என, தமிழக, பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகிறார். கவலை வேண்டாம்... பல ஆண்டுகளாக, தமிழகம், எந்தச் சூழ்நிலையிலும் மாறாமல், அப்படியே தான் இருக்கிறது.
ஆனா, வரும் சட்டசபை தேர்தலில் இவங்க போடும் கணக்குகள் மாறிடும் போல தெரியுதே! பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்பு மணி பேச்சு: தமிழகத்தில், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க, 'போக்சோ' நீதிமன்றங்களை அதிகப்படுத்த வேண்டும். தமிழகத்தில் மொத்தமுள்ள, 7,000 போக்சோ வழக்குகளை விசாரிக்க, 50 நீதிமன்றங்கள் தேவைப்படும் நிலையில், வெறும், 20 நீதிமன்றங்கள் மட்டுமே செயல்படுகின்றன. இப்படி இருந்தால், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர்களுக்கு எப்படி தண்டனை பெற்றுத்தர முடியும்?
அதிகரித்து வரும், 'போக்சோ' வழக்குகளை விசாரிக்க, 50 அல்ல; 100 சிறப்பு நீதிமன்றங்களைக் கூட அமைக்கலாம்!

