PUBLISHED ON : டிச 14, 2025 03:24 AM

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை:
அரசு
கல்லுாரிகளில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு இலவச, 'லேப்டாப்'
வழங்கும் திட்டத்தை, ஓட்டு அரசியலுக்காக தி.மு.க., அரசு அறிவித்துள்ளது;
இதன் மூலம், 'ஏமாற்று மாடல் அரசு' என்பதை நிரூபித்துள்ளது. இந்த திட்டம்,
முதன் முதலாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் துவக்கப்பட்டு, 9 லட்சம்
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ -- மாணவியருக்கு, 'லேப்டாப்'கள் வழங்கப்பட்டன.
பிளஸ்
1, பிளஸ் 2 மாணவ - மாணவியருக்கு ஓட்டு போடும் வயதில்லை என்றாலும், இலவச
லேப்டாப் வழங்கிய ஜெ., தான் பாராட்டுக்குரியவங்க!
தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை:
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தாய் முருகா... தி.மு.க.,வை நாடு சிரிக்க வைக்கிறது. திருப்பரங்குன்றத்தில் எத்தனை திருப்பங்கள். மழையால், சென்னையை நீச்சல் குளமாக மாற்றியதை மறைக்க, திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுதலை தடுத்த நாடகம். தீபம் ஏற்றுதலை தடுத்தது தவறு என்பதை மறைக்க, பார்லிமென்டில் கூச்சல், குழப்பம் ஏற்படுத்தி, நாடகம். அந்த கூச்சலை கூச்சமே இல்லாமல் மறைக்க, நீதிபதி மீது, 'இம்பீச்மென்ட்' நாடகம். தி.மு.க.,வின் கபட நாடகம், நாட்டு மக்களுக்கு தெரியும். தி.மு.க.,வை அழிக்க போவதற்கு முன், மக்கள் அமைதியாக இருப்பதும் நாடகம் தான்.
'உலகமே ஒரு நாடக மேடை; நாமெல்லாம் அதில் நடிகர்கள்'னு பிரபல ஆங்கில நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர் அன்னைக்கே சொல்லிட்டாரே!
தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை:
சொர்க்கத்துக்கு வந்து விட்டதாக, கண்ணை மூடியபடி கத்துகிற கழுதை, கடைசியில் கண்ணை திறந்து பார்த்து, தான் நிற்பது, அதே குப்பை மேடுதான் என தெரிந்து, அலுப்போடு தன் கத்தலை நிறுத்துவதாக, கதை ஒன்று உண்டு. அதுபோல் மக்கள் ஏன் கூடினர். அதை பார்த்து நாம் ஏன் ஏகத்துக்கும் உணர்ச்சி வசப்பட்டு கூவினோம் என்பதெல்லாம், மே மாதம் வந்தால், அந்த வேடிக்கை நடிகருக்கு (விஜய்க்கு) விளங்கத்தான் போகிறது.
இன்னும் சிலர், 'தாங்கள் இப்ப இருக்கும் சொர்க்கம், அடுத்த அஞ்சு வருஷத்துக்கும் நீடிக்கும்'னு பகல் கனவு காணுறாங்களே!
தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பேட்டி: 'டில்லி பாதுஷா என்ற நினைப்போடு, தமிழகத்திற்கு எந்த ஷா வர நினைத்தாலும், தி.மு.க.,வினர் தகுந்த பாடம் புகட்டுவர்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ரஷ்ய நாட்டின் ஸ்டாலின் என்ற நினைப்போடு, தமிழகத்தில் அடக்குமுறை ஆட்சியின் வழியே, அராஜகம் செய்து விடலாம் என, எந்த ஸ்டாலின் நினைத்தாலும், பா.ஜ.,வினர் தகுந்த பாடம் புகட்டுவ ர்.
மக்கள் யாருக்கு பாடம் புகட்ட போறாங்க என்பது தான், 'மில்லியன் டாலர்' கேள்வி!

