PUBLISHED ON : டிச 15, 2025 02:46 AM

ராஜ்யசபா தி.மு.க., எம்.பி., திருச்சி சிவா பேட்டி: தேர்தல் வாக்குறுதிப்படி, மகளிர் உரிமைத்தொகை திட்டம், 2023ல் துவங்கப்பட்டது. மாநிலம் முழுதும், 1.14 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இதுவரை, 30,000 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது விடுபட்ட, தகுதியான, 17 லட்சம் பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால், பயனாளிகள் எண்ணிக்கை,1.31 கோடியாக உயர்ந்துள்ளது.
விடுபட்ட பயனாளிகள், தேர்தல் வரும்போது தான் இவங்க கண்களுக்கு தெரியவந்தாங்களோ?
முன்னாள் எம்.எல்.ஏ.,வும், அ.தி.மு.க., மருத்துவ அணி இணை செயலருமான டாக்டர் சரவணன் அறிக்கை:
'மக்களை தேடி மருத்துவம்' என்ற திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். ஒரு பயனாளிக்கு மருந்து கொடுத்துவிட்டு, அதை மூன்று பேருக்கு கொடுத்ததாக கணக்கு காட்டுகின்றனர். இதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, பணிச்சுமை அதிகமாக உள்ளது. அவர்கள், 'தற்போது வழங்கப்படும், 5,500 ரூபாய் மாத சம்பளத்தை, 10,000 ஆக உயர்த்தி தரவேண்டும்' என, போராடி வருகின்றனர். ஆனால், முதல்வர், அவர்களின் அபய குரலை கேட்டும், கேட் காமலும் உள்ளார்.
அப்படி என்றால், ரெண்டு பயனாளிகளின் மருந்துக்கான பணம் எல்லாம், எங்க, யாருக்கு போகுது என்ற கேள்வி எழுதே!
விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை பொதுச்செயலர் சந்திரசேகரன் அறிக்கை: திருப்பரங்குன்றம் மலை மீது, கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி சுவாமிநாதன் உத்தரவில் எந்த குறையும் கூற முடியாது. ஆனால், சிறுபான்மையினர் ஓட்டு வங்கிக்காக அரசியல் செய்யும், 'இண்டி' கூட்டணி எம்.பி.,க்கள், நீதிபதியை பதவி நீக்கம் செய்யக் கோரி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மனு அளித்துள்ளனர். இது, நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, அந்த மனுவை தள்ளுபடி செய்து, திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற, தமிழக அரசுக்கு ஓம் பிர்லா உத்தரவிட வேண்டும்.
தமிழக உயர் நீதிமன்ற உத்தரவையே மதிக்காதவங்க, லோக்சபா சபாநாயகர் உத்தரவை மட்டும் மதிச்சிடுவாங்களா என்ன?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் அறிக்கை: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு, காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த சில மாதங்களாக, காலை உணவு சாப்பிடுவோர் எண்ணிக்கை, 40 சதவீதம் குறைந்து விட்டது. அதாவது, 4.68 லட்சம் மாணவ - மாணவியரில், 2.87 லட்சம் பேரே காலை உணவு சாப்பிடுவதாக, கடந்த மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
உணவின் தரம் குறைஞ்சிடுச்சா அல்லது மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்திட்டு போயிட்டாங்களா?

