PUBLISHED ON : டிச 28, 2025 03:32 AM

இந்திய கம்யூ., கட்சி முன்னாள் மாநில செயலர் முத்தரசன் பேட்டி:
தி.மு.க., கூட்டணி, 'சீட்'களின் எண்ணிக்கை அடிப்படையில் உருவாக்கப்பட்டது
அல்ல. தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிடும் கட்சிகள், அந்த கூட்டணியில்
ஓராண்டுக்கு மேல் நீடிப்பதில்லை. தி.மு.க., கூட்டணி, கொள்கை ரீதியாக
உருவாக்கப்பட்டு, கடந்த, 10 ஆண்டுகளாக ஒற்றுமையாக உள்ளது.
உண்மை தான்...
கூட்டணி கட்சிகளுக்கு சீட்கள் மட்டுமில்லாம, தேர்தல் செலவுக்கு
கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகளையும் தி.மு.க., வாரி வழங்குவதால் தான்,
கூட்டணி தொடர்ந்து நீடிக்குது!
தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை:
முதல்வர் ஸ்டாலின், 2011ம் ஆண்டு சென்னை கொளத்துாரில் போட்டியிட்ட போது, 'கொளத்துார் தொகுதியில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகள் முற்றிலுமாக அகற்றப்படும். குளம், குட்டை, ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, குடிநீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்படும்' என்று அளித்த வாக்குறுதிகளை, 15 ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை. தற்போது, 'கொளத்துாரில் உள்ள வண்ணான்குளம் ஏரி ஆக்கிரமிப்புகளை, போர்க்கால அடிப்படையில் விரைந்து அகற்ற வேண்டும்' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பை நிறைவேற்ற, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற உத்தரவிட்ட தீர்ப்பையே மதிக்காதவங்க, இதை மட்டும் மதிச்சிடுவாங்களா என்ன?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை:
'மகாத்மா காந்தி பெயர் நீக்கப்பட்டு, 100 நாள் வேலை திட்டம் சிதைக்கப்பட்டுள்ளது' என்கிறார், முதல்வர் ஸ்டாலின். 'காந்தியை பா.ஜ.,வுக்கு பிடிக்காது' என்றும், அதற்கான காரணத்தையும் சொல்கிறார். அப்படியானால், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், விழுப்புரத்தை தலைமையிடமாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட, ஜெயலலிதா பெயரிலான பல்கலை சிதைக்கப்பட்டு, அதன் உறுப்பு கல்லுாரிகளை, அண்ணாமலை பல்கலையோடு சேர்த்தது ஏன்? அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்ட, 'அம்மா' கிளினிக்குகளுக்கு, மூடு விழா நடத்தியது ஏன்? ஜெயலலிதாவை பிடிக்காது என்பது தானே காரணம்!
இதைத்தான் கிராமங்களில், 'மாமியார் உடைத்தால் மண் சட்டி; மருமகள் உடைத்தால் பொன் சட்டி'ன்னு சொல்வாங்க!
தமிழக பா.ஜ., துணை தலைவர் வி.பி.துரைசாமி பேட்டி:
முதல்வர் ஸ்டாலின் எதற்கெடுத்தாலும், தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக கூறுகிறார். சிறப்பு வாக்காளர் திருத்தப் பணியில், அதிக வாக்காளர்களை நீக்கியதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு, போலி வாக்காளர்களை தி.மு.க., அதிகளவில் சேர்த்ததே காரணம். தேர்தலுக்கு அதிக வாக்குறுதிகளை அளிப்பதிலும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
'தி.மு.க., நிறைவேற்றாத வாக்குறுதிகள்'னு இவங்க ஒரு புத்தகமே அச்சடித்து வெளியிடலாமே!

