PUBLISHED ON : டிச 29, 2025 01:28 AM

முன்னாள் எம்.எல்.ஏ.,வும், நடிகருமான எஸ்.வி.சேகர் பேச்சு:
'பா.ஜ.,வை சேர்ந்தவர்களோ, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரோ, ஹிந்து மக்கள் கட்சியினரோ, தங்கள் பிள்ளைக்கோ, பேரப்பிள்ளைக்கோ முருகன் என பெயர் சூட்டியது உண்டா?' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேட்டார். அதற்கு நடிகை கஸ்துாரி, 'என் மகன் பெயரே கார்த்திகேயன் தான்' என்றார். நானும் சொல்கிறேன், என் மகன் பெயர் அஷ்வின் சுப்ரமணியன். எங்கள் குலதெய்வம், முத்துக்குமாரசாமி வைத்தீஸ்வரன் கோவில்.
தி.மு.க.,வினர் கூட தராத பதிலடியை, அந்த கட்சியின் தலைமை மனம் குளிரும் வகையில் இவர் தந்துட்டாரே!
தமிழக காங்., செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் அறிக்கை:
தமிழகத்தில், காங்கிரஸ் கட்சி வளர விரும்பினால், கூட்டணி சேர்வதற்கு ஒரே வழி, தமிழக வெற்றிக் கழகம் கட்சி தான். தி.மு.க., ஒரு பிரமாண்டமான காடு போன்றது; அதில் உள்ள பெரிய மரங்களும், செடிகளும் சூரிய ஒளி கிடைக்காமல் தடுத்து விடும். தி.மு.க., நிழலிலேயே இருந்தால், காங்கிரசின் வளர்ச்சி குன்றிப் போய்விடும்.
ஆனா, அந்த நிழல் தான் சொகுசா இருக்குன்னு தமிழக காங்கிரசில் பெரும்பாலானவங்க நினைக்கிறாங்க போலிருக்கே!
த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி:
தி.மு.க., அரசு, இடைநிலை ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையை கவனத்தில் கொண்டு செயல்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, கடந்த சட்டசபை தேர்தல் நேரத்தில் தி.மு.க., அறிவித்த வாக்குறுதிகளை நம்பி, இடைநிலை ஆசிரியர்கள் ஓட்டளித்தனர். ஆனால், அவற்றை ஆட்சி முடியும் நிலையில் கூட, இன்னும் நிறைவேற்றாதது ஏற்புடையதல்ல. அவர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தியும் அரசு கவனத்தில் கொள்ளாதது முறையல்ல.
'வர்ற, 2026 சட்டசபை தேர்தலில் ஜெயித்தால், இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கையை கண்டிப்பா நிறைவேற்றுவோம்'னு தி.மு.க.,வினர் வாக்குறுதி தருவாங்களோ?
தி.மு.க., வர்த்தகர் அணி செயலர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் அறிக்கை:
'வட மாநிலங்களில், தமிழக சுதந்திர போராட்ட தியாகிகள் போற்றப்படுவது இல்லை' என, பார்லிமென்டில் எங்கள் கட்சி எம்.பி., திருச்சி சிவா பேசினால், 'தமிழகத்தில் பூங்கா அல்லது நுாலகத்திற்கு ஏன் வாஜ்பாய் பெயர் வைக்கவில்லை?' என, வம்படி அரசியலை பேசுகிறார், பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா. வட மாநில தலைவர்களை ஒதுக்கும் எண்ணம், தி.மு.க.,விற்கு இருந்ததில்லை. வி.பி.சிங்கின் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்தாரே... வி.பி.சிங் வட மாநிலத்தவர் தானே!
வி.பி.சிங், உங்க முன்னாள் தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர் என்பதால், அவருக்கு சிலை திறந்தீங்களே தவிர, வடமாநிலத்தவர் என்பதால் அல்ல!

