PUBLISHED ON : ஜன 11, 2026 03:24 AM

தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் வழக்கின் தீர்ப்பு, பெரும்பான்மை மக்களின்
வெற்றி. திராவிட மாடல், மதவாத தி.மு.க., அரசின் சாயத்தை வெளுத்து, அதன்
சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டி விட்டது, உயர் நீதிமன்றம். அதற்கு
முன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை தரக்குறைவாக விமர்சனம் செய்ததை, அமைதியாக
வேடிக்கை பார்த்து கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின், தமிழக மக்களிடமும்,
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனிடமும் வெ ளிப்படையாக மன்னிப்பு கோர வேண்டும்.
'நாம விமர்சிக்க முடியாததை, மத்தவங்க செய்றாங்களே'ன்னு மவுனமா இருந்தவங்க
எப்படி மன்னிப்பு கேட்பாங்க?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை:
பழைய சினிமா படங்களை, 'ரீமேக்' செய்து, மீண்டும் திரையிடுவது போல, அ.தி.மு.க., ஆட்சியில், மேல்நிலைப்பள்ளி வகுப்பு மாணவ - மாணவியருக்கு வழங்கப்பட்டு வந்த இலவச, 'லேப்டாப்' திட்டத்தை, தி.மு.க., ஆட்சி காலம் முடியும் தருவாயில், தேர்தலில் ஓட்டளிக்க தகுதியான கல்லுாரி மாணவ - மாணவியருக்கு மட்டும் வழங்குவது, தி.மு.க., திட்டமிட்டு நடத்தும், அப்பட்டமான ஓட்டு வங்கி அரசியல் நாடகம்.
அ.தி.மு.க.,வினர் தான், அரசியல் ராஜதந்திரம் தெரியாம, ஓட்டுகள் இல்லாத பள்ளிக்கூட பசங்களுக்கு, 'லேப்டாப்'களை குடுத்துட்டாங்க!
ஹிந்து மக்கள் கட்சியின், மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் அறிக்கை: ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, 'திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் ரத்தக் களரியை எதிர்பார்க்கின்றனரா... நீதிபதிகள் வரம்பு மீறிவிட்டனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது' என, பேசி உள்ளார். வைகோ, என்ன நோக்கத்திற்காக, யாரை எதிர்த்து கட்சி ஆரம்பித்தாரோ, அந்த நோக்கம் தற்போது என்னவாயிற்று?
தி.மு.க.,வின் வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி ஆரம்பித்த வைகோவே, இன்று அதே வழியில் தானே பயணிக்கிறாரு!
தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேட்டி:
பொங்கல் பரிசுத் தொகுப்பு, 3,000 ரூபாய் வழங்குவதை தேர்தல் அரசியல் என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்றோர் கூறுகின்றனர். நாங்கள் என்ன செய்தாலும், அரசியலாக பார்ப்பதால் அதை நிறுத்தி விட முடியுமா? தி.மு.க.,வின் ஐந்தாண்டு கால ஆட்சிக்கு பா.ம.க., தலைவர் அன்புமணி, 13 மார்க் கொடுத்துள்ளார். அவர் வாத்தியாரா என்ன... எங்களுக்கு மார்க் போடுவதற்கு?
தேர்தலுக்காக இல்லை என்றால், போன வருஷம் பொங்கலுக்கு ஏன், 3,000 ரூபாய் தரலை?

