PUBLISHED ON : ஜன 12, 2026 02:23 AM

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு: பொங்கலுக்கு, 3,000 ரூபாய், மகளிர் உரிமை தொகை 1,000, கல்லுாரி மாணவர்களுக்கு, 1,000 என, ஆயிரம் ஆயிரமாக படி அளப்பவர், நம் முதல்வர் ஸ்டாலின். எதற்கெடுத்தாலும் ஆயிரம் ஆயிரமாக எடுத்து கொடுக்கிறார். ஆனால், தேர்தல் வந்தால் ஒன்றும் கிடையாது.அது சரி... 'அரசு பணத்தில் இருந்து ஆயிரம் ஆயிரமா அள்ளி குடுத்துட்டதால, தேர்தலில் ஓட்டுக்கு எங்களிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காதீங்க'ன்னு போட்டு உடைச்சிட்டாரே!
சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி பேட்டி: திரைப்படத்திற்கு, 'சென்சார்' அனுமதி என்பது ஒரு நடைமுறை. அனுமதிக்கு தாமதம் ஏன் என்று தெரியவில்லை. ஒரு படத்திற்கு எத்தனை நாளில் சான்றிதழ் வழங்கப்படும் என்பதற்கு, துறை சார்ந்தவர்கள் தான் பதிலளிக்க முடியும். தொழில், கட்டடத்திற்கு உரிமம் பெறுவதில் கூட நிர்வாக ரீதியாக தாமதமாகிறது. சென்சார் அனுமதியில் உள்நோக்கமா, இல்லையா என்பது தெளிவாக தெரியவில்லை.
'விஜயின் ஜனநாயகன் படத்துக்கு சென்சார் அனுமதி மறுப்புக்கு பா.ஜ., தான் காரணம்'னு இவரது கட்சியின் எல்லா தலைவர்களும் குற்றம் சாட்டிட்டு இருக்காங்க... எப்பவுமே கட்சியினர் ஒண்ணு சொன்னா, அதுக்கு எதிராகத்தான் பேசணும்னு, இவர் கங்கணம் கட்டியிருப்பாரோ?
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி: த.வெ.க., தலைவர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் வெளிவராதது குறித்து, பா.ஜ., தலைவர்களிடம் தான் கேட்க வேண்டும். அது அவர்களுக்கும், பா.ஜ.,விற்கும் உள்ள ரகசியம். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னையை எவ்வளவு கட்டுப்படுத்த முடியுமோ, அந்த அளவு முதல்வர் தலைமையிலான காவல் துறை கட்டுப்படுத்தி, சிறப்பாக செயல்படுகிறது. அ.தி.மு.க., ஆட்சியை ஒப்பிடும் போது, இந்த ஆட்சியில் குற்றங்கள் குறைந்துள்ளன.
'குற்றங்கள் குறைஞ்சிருக்கு'ன்னு பெருமை அடிப்பதை விட, 'குற்றங்களே நடக்காமல் தடுத்திருக்காங்க'ன்னு சொல்வது தானே நல்லாட்சிக்கு அடையாளம்!
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில், தங்களின் பெரும்பாலான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு இருப்பதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, பல்வேறு குறைபாடுகள் உடைய உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்.
'சரி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துறோம்'னு வாக்குறுதி குடுத்துட்டு, அடுத்த அஞ்சு வருஷத்தையும் தி.மு.க.,வினர் ஓட்டிடப் போறாங்க!

