PUBLISHED ON : ஜன 21, 2026 04:07 AM

நடிகர், கஞ்சா கருப்பு பேட்டி:
அரசு நிறுவனமான டாஸ்மாக்கில்
குடித்துவிட்டு, இரு சக்கர வாகனத்தில் செல்லும் ஆண்கள், ஆண்களுக்கான இலவச
பேருந்துகளில் ஏறி, பாதுகாப்பாக வீடு போய் சேருவர். அதற்காகவே, இந்த
திட்டத்தை விட்டு விடாமல் செயல்படுத்த வேண்டும்; தேவையானால், பேருந்து
முகப்பில், மகளிர் - ஆடவர் இலவச பயண பேருந்து என போட்டுக் கொள்ளலாம்.
பா.ஜ.,வுக்கு ஆதரவாளரான கஞ்சா கருப்பு, பா.ஜ.,வின் கூட்டணி தலைமையான,
அ.தி.மு.க, அறிவித்த, 'ஆண்களுக்கு இலவச பஸ்' என்ற தேர்தல் வாக்குறுதி மீது,
'வஞ்சப் புகழ்ச்சி' பாடுவது, சிறப்பா இருக்கு! 'ஆண்களுக்கும் இலவச பஸ்'
திட்டம், இனி அமையப் போகும் எந்த ஆட்சியில் அமல்படுத்தப்பட்டாலும்,
பெண்களின் பாதுகாப்பு இன்னும் மோசமாகத் தான் இருக்கப் போகிறது!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி:
தி.மு.க.,விற்கு வில்லனாக மாறி, திருப்பித் தாக்கும் ஏவுகணையாக, அவர்களது தேர்தல் அறிக்கை இருக்கப் போகிறது.
அது சரி... ஆனால், இவங்க கட்சி பொதுச் செயலரும், அதே போன்ற ஏவுகணையை தானே கையில் துாக்கி வச்சிருக்காரு... இவங்களுக்குன்னா தக்காளி சட்னி; தி.மு.க.,வுக்குன்னா ரத்தமா?
தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் அறிக்கை:
திருவள்ளூர் மாவட்டம், ஒண்டிக்குப்பத்தில், போதையில் தாறுமாறாக, இருசக்கர வாகனத்தை இயக்கியோரை தட்டிக் கேட்ட, அப்பாவி இளைஞர்கள் இருவரை, போதைக் கும்பல் சரமாரியாக கல்லால் தாக்கி கொலை செய்திருப்பது, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. தி.மு.க., ஆட்சியில் தலை விரித்தாடும் கஞ்சாவால், தமிழகம் திணறுகிறது.
தமிழக முதல்வர் தான், 'போதையை ஒழிக்க, மத்திய அரசால் தான் முடியும்' என சொல்லி விட்டாரே... நாகேந்திரன், தன் கட்சி மேலிடத்தில் சொல்லி, தமிழகத்தில் கஞ்சாவை முற்றிலும் அகற்றலாமே!
பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை பேட்டி:
பொய் வாக்குறுதிகளை தந்து, தி.மு.க., ஆட்சிக்கு வந்து உள்ளது. இதற்கு முடிவுரை எழுதப்பட்டு வருகிறது. தமிழகத்தை போதையில் தள்ளாட வைத்துள்ள இந்த விடியா ஆட்சிக்கு, விடை கொடுக்க தமிழக மக்கள் தயாராகி விட்டனர். பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை, கல்வி, பெண்களின் முன்னேற்றம் உட்பட அடித்தட்டு மக்களை மேம்படுத்தும் அறிக்கையாக இருக்கும். தமிழுக்கும், பா.ஜ.,விற்கும் சம்பந்தமில்லை என்று சொல்பவர்களுக்கு, பதிலடி கொடுக்கக்கூடிய தேர்தல் அறிக்கையாக இருக்கும்.
இப்படி வாயால் வடை சுட்டே, தமிழக பா.ஜ., தலை துாக்காமலேயே போனது. சமீபத்திய ஐந்தாண்டில் தான், தலை துாக்கத் துவங்கியுள்ளது. ஏதாவது ஒரு மாநிலத்துக்கான கவர்னர் பதவி தான், இவருக்கு அழகு என்பதை, தன் பேச்சால் மீண்டும் நிரூபிக்கிறாரே!

