PUBLISHED ON : ஜன 25, 2026 01:57 AM

தமிழக பா.ஜ., தேர்தல் அறிக்கை குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அறிக்கை: தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய காலம் நெருங்கி விட்டது. போலி மதச்சார்பின்மை, குடும்ப வாரிசு அரசியல், ஊழல் வழியாக சொத்து குவிப்பு, இலவசங்கள் வழியாக மக்களை ஏமாற்றி ஓட்டு வங்கியை தக்கவைத்தல், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், புதிய வாக்குறுதிகளை தருவது போல நடித்தல் போன்றவற்றால், இந்த ஆட்சி அடைந்திருக்கும் ஏகபோக கொள்ளைகளை தடுக்க, இந்த தேர்தல் ஒரு வாய்ப்பாக இருக்கும். கடந்த நாலே முக்கால் வருஷ தி.மு.க., ஆட்சியின், 'சாதனை'களை நாலே வரியில் அடுக்கிட்டாரே!
தமிழக பா.ஜ., தொழில் வல்லுனர் பிரிவு தலைவரும், ஆடிட்டருமான எஸ்.சுந்தர்ராமன் அறிக்கை: பிரதமர் மோடியின், 'டபுள் இன்ஜின் அரசு' என்பது வெறும் கோஷம் அல்ல. தமிழகம் வளர்ந்திருப்பது உண்மை தான். ஆனால், அந்த வளர்ச்சி ஜி.எஸ்.டி., தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே, ராணுவ தொழில் வழித்தடம், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, ஏற்றுமதி ஊக்குவிப்பு, 'ஸ்டார்ட் அப்' சூழல், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன்கள் என, இவை அனைத்தும், மத்திய அரசின் இன்ஜின் வாயிலாக வந்த எரிபொருள். ஒரு இன்ஜினால் ஓடும் ரயில் மெதுவாகத் தான் செல்லும். இரு இன்ஜின்கள் சேர்ந்தால் தான் வேகம், பாதுகாப்பு, நிலைத்த வளர்ச்சி கிடைக்கும்.
வாஸ்தவம் தான்... சாதாரண பில்டர் காபியைக் கூட, 'டபுள் ஸ்ட்ராங்க்'ல குடித்தால் கூடுதல் புத்துணர்ச்சி கிடைக்குதே!
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல், மகளிருக்கு இலவச பஸ் பயணம், புதுமைப்பெண், மகளிர் உரிமை தொகை, சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி என, மகளிருக்கு அதிக திட்டங்களை வழங்கியுள்ளார்.
தெருவுக்கு தெரு திறந்து வச்சிருக்கும், 'டாஸ்மாக்' மதுக்கடைகளை மூடுவதே, மகளிருக்கு நீங்க செய்யும் பேருதவியா இருக்கும்!
தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை: நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, ஒவ்வொரு ஆண்டும், மத்திய அரசின் வேளா ண் விலை மற்றும் செலவு ஆணையத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. மாநில அரசு, நெல் சாகுபடிக்காகும் செலவினத்தை கணக்கிட்டு, குறைந் தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி வழங்க பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் பயனில்லை. பா.ம.க., தலைவர் அன்புமணி அங்கம் வகிக்கும் பா.ஜ., தலைமையிலான மத்திய அரசிடம் கேட்டு, அதிக ஆதரவு விலையை பெற்றுத் தர முடியாவிட்டால், அந்த கூட்டணியில் இருந்து வெளியேற அன்புமணி தயாரா?
இலங்கையில், 2009ல் போர் உக்கிரமா இருந்தப்ப, அதை நிறுத்த மத்திய காங்., அரசு எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்ததை கண்டிச்சி, மத்திய கூட்டணி அரசில் இருந்து இவங்க வெளியே வந்தாங்களா?

