PUBLISHED ON : ஜன 26, 2026 02:16 AM

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அறிக்கை: ஒரு பக்கம், 10 கட்சிகள் அடங்கிய கூட்டணி; மற்றொரு புறம், எட்டு கட்சிகள் கூட்டணி அமைந்துள்ளன. ஆனால், விஜய் தனித்தே நிற்பார். அவருக்கும் கூட்டணி அமையும். 234 தொகுதிகளிலும் விஜய் கூட்டணி தான் வெற்றி பெறும். அவர் கை காட்டுபவர் தான் வெற்றி பெறுவார்.
* அ.தி.மு.க.,வில் இவர் இருந்தப்ப பேசிய அதே வசனத்தை, 'ஜெ.,' என்ற பெயருக்கு பதிலா, 'விஜய்'னு போட்டு நிரப்பி, பொளந்து கட்டுறாரே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: தமிழக அரசு, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. தலைமை செயலக அலுவலர் சங்கம் உட்பட பல்வேறு சங்க பிரதிநிதிகளின் முக்கிய கோரிக்கைகள் அந்த அரசாணையில் இடம் பெறாததால், பெரும்பாலான அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், அதிருப்தியோடு, நீறு பூத்த நெருப்பாக இருக்கின்றனர் என்பது தான் உண்மை.
* அரசு ஊழியர்களின் ஆதரவை பெற, மத்திய அரசின் தயவு, அ.தி.மு.க.,வுக்கு இருப்பதால், நிதி நெருக்கடி பயமின்றி, 'பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்' என்ற வாக்குறுதியை இவங்க தரலாமே!
விருதுநகர் தொகுதி காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர் பேச்சு: தமிழகத்தில், அ.தி.மு.க., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில், அ.ம.மு.க.,வும் சேர்ந்து விட்டது. மத்திய அரசின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அ.தி.மு.க.,வை, பா.ஜ., கைப்பற்றுகிறது என்பது இப்போது முழுமையாக தெளிவாகி விட்டது. இது, கூட்டணி அரசியல் அல்ல; மிரட்டல் அரசியல். இது தான், கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் வழி.
* 'ஆட்சியில் பங்கு தரலைன்னா, நடிகர் விஜயின், த.வெ.க., பக்கம் போயிடுவோம்'னு, காங்கிரஸ் போக்கு காட்டுவது மட்டும் மிரட்டல் அரசியல் இல்லையா?
கம்யூ., கட்சியின் மாநில செயலர் சண்முகம் அறிக்கை: சமூகத்தில், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எல்.ஐ.சி., போன்ற பெரிய, பொதுத் துறையின் மதுரை அலுவலகத்திலேயே, பெண் மேலாளர் எரித்து கொல்லப்பட்டுள்ளார். அலுவலக நேரங்களுக்கு அப்பாற்பட்டு, பெண்கள் பணிபுரியும் சூழலில், அவர்களுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
* அரசு அலுவலகங்களிலேயே பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றால், பொதுவெளியில் என்ன பாதுகாப்பை ஆட்சியாளர்கள் கொடுத்துடப் போறாங்க?

