PUBLISHED ON : ஜன 29, 2026 04:29 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அறிக்கை:
முதல்வர்
ஸ்டாலினின் காஞ்சிபுரம் வருகைக்காக, கொட்டும் மழையிலும் ஆங்காங்கே மக்களை
காக்க வைத்தது கொடூரமான செயல். காஞ்சிபுரத்திலிருந்து முதல்வரின்,
'கான்வாய்' வருவதற்காக, 20 நிமிடங்களுக்கு மேல் வாகனங்களை போலீசார்
நிறுத்தி வைத்திருந்தனர். இப்படி எந்தவொரு இடத்திற்கும், தந்தையும், மகனும்
சரியான நேரத்திற்கு செல்வதில்லை. அதற்கு மக்கள் என்ன தவறு செய்தனர்?
அதிகாரத்தின் ஆட்டமெல்லாம் இன்னும் சில நாட்களுக்கு தான்!
இந்த மாதிரி
அலப்பறைகளுக்கான முன்னோடியே, உங்க தலைவி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா
தானே... அவங்க முதல்வரா இருந்தப்ப, வீட்ல இருந்து கிளம்புறதுக்கு
முன்னாடியே, ரோட்ல பல மணி நேரம், 'டிராபிக்'கை நிறுத்தியதை எல் லாம் இவர்
மறந்துட்டாரோ?
அ.தி.மு.க., மருத்துவரணி மாநில இணை செயலர் டாக்டர் சரவணன் பேட்டி:
நோபல் பரிசு பெற்ற, பொருளாதார மேதை அமர்த்தியா சென் எழுதிய புத்தகத்தில், அம்மா உணவகத்தின் கட்டமைப்பு, அதன் தேவை, அதன் சிறப்பம்சங்கள் குறித்து, 10 பக்கங்களுக்கு மேல் எழுதியுள்ளார். பொது நிர்வாகத்தில், தமிழகத்தின் நடவடிக்கைகள் நாட்டுக்கே முன்னுதாரணம் என புகழ்ந்தும், அம்மா உணவகங்கள் காலத்தின் தேவை என்றும் கூறியுள்ளார். தி.மு.க., ஆட்சி வந்தது முதல், அம்மா உணவகங்கள் படிப்படியாக மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
முந்தைய ஆட்சியின் திட்டங்களை, அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் நிறுத்துறதெல்லாம் காலம் காலமா நடக்கறது தானே... என்னமோ இப்ப தான் புதுசா நிறுத்துறா மாதிரி உருகுறாரே!
தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி - எம்.பி., பேட்டி:
அ.தி.மு.க., தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கலாம். அதிலிருந்து எதுவும் நிறைவேற்றப்படாது என்று, மக்களுக்கு தெளிவாக தெரியும். நிச்சயமாக, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். நாங்கள் வாக்குறுதி கொடுத்தால், அதை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்பதையும், மக்கள் நன்றாக அறிவர். கடந்த 2006- தேர்தலில், தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன் என அழைக்கப்பட்டது. இந்த முறை, தேர்தல் அறிக்கை கதாநாயகியாக இருக்கும்.
கதாநாயகன், கதாநாயகின்னு சொல்லி இலவசங்களை அள்ளி வீசும் தேர்தல் அறிக்கையை தான் வெளியிட போறீங்க... உண்மையில் தமிழக மக்களுக்கு உங்க தேர்தல் அறிக்கை தான் மாபெரும் வில்லன்னு மக்கள் எப்ப தான் தெரிஞ்சுக்குவாங்களோ?
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி மாநில செயலர் கதிரவன் பேட்டி:
அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். வரும் வாரத்தில் பேச்சு நடைபெற உள்ளது. உசிலம்பட்டி, ராமநாதபுரம், நாங்குநேரி ஆகிய மூன்று தொகுதிகளை, எங்கள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என கேட்டிருக்கிறோம்.
அது சரி... உங்க தொகுதி பட்டியலை பார்த்து பழனிசாமி விழுந்து விழுந்து சிரித்திருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை!

