PUBLISHED ON : பிப் 10, 2026 03:16 AM

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: உதவித்தொகை உயர்வு உட்பட, 10 அம்ச கோரிக்கைகளுடன் மாற்றுத்திறனாளி நல ஆணையரகம் முன்பு, போராட்டத்தில் ஈடுபட்ட, மாற்றுத்திறனாளிகளை, 14 மணி நேரம் பஸ்சில் அடைத்து வைத்து, பெண்களை கழிப்பறைக்கு கூட செல்ல வாய்ப்பில்லாமல் கொடுமைப்படுத்திய காவல் துறையையும், இரக்கமற்ற அரக்கத்தனமான ஆட்சியாளர்களையும், வன்மையாக கண்டிக்கிறேன். 'ஊனமுற்றோர்' என்ற பெயரை, 'மாற்றுத்திறனாளிகள்' என மாற்றியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி... அவரது மகன் ஆட்சியில், அவங்களை இப்படி அலைக்கழிச்சிருக்கணுமா?
தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: சென்னையில் இருசக்கர வாகனங்களை ஓட்டுவோர், மொபைல் போனில் பேசிக் கொண்டே செல்வது அதிகரித்து வருகிறது. ஆண்கள், பெண்கள் என, இருபாலரும் சற்றும் கவலை இல்லாமல், அலட்சியமாக மொபைல் போனில் பேசிக் கொண்டே, தங்களுக்கும், மற்றவர்களுக்கும், ஆபத்தை ஏற்படுத்தும் போக்கு கண்டிக்கத்தக்கது. இந்த விதிமீறலை கட்டுப்படுத்த, காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடும் அபராதத்தோடு, வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். வாகன ஓட்டிகளின் உரிமங்களை ரத்து செய்தாலும் தவறில்லை.
அட... சீருடை அணியாமல் பயணிக்கும் நிறைய போலீசாரே இப்படித்தான் பண்றாங்க... அதனால, அவங்க நடவடிக்கை எடுப்பது கேள்விக்குரியது தான்!
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி: தி.மு.க., - காங்., கூட்டணியில், எந்த இழுபறியும் இல்லை; சுமுகமாக இருக்கிறது. சட்டசபை தேர்தலில் கேட்கும் தொகுதிகளை கண்டிப்பாக தருவர். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்கும் உரிமை அனைவருக்கும் இருக்கிறது. முதல்வருக்கு கொடுக்கும் மனசு இருக்கிறது. தி.மு.க.,வுக்கு கண்டிப்பாக பெரிய மனசு இருக்கிற து.
இவர் என்னதான் ஐஸ் வச்சாலும், 'ஆட்சியில் பங்கு' என்ற இவரது கனவு கானல் நீராகவே முடியும்!
பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி: மாநிலத்தில் நாள்தோறும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, கொலை, கொள்ளை, சட்டம் - ஒழுங்கு சீரழிவு என, தமிழகம் அழிவு பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் என, ஆயிரக்கணக்கான பெண்கள் இரவிலும் போராடுகின்றனர். ஆனால், 'மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்' என்று முதல்வர் ஸ்டாலின் மனசாட்சி இல்லாமல் பேசுகிறார். 'உங்கள் கனவை சொல்லுங்கள்' என, ஸ்டாலின் கேட்கிறார். எங்களுடைய ஒரே கனவு, தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்புவது தான்.
இந்த கனவை எல்லாம் தி.மு.க.,வினரிடம் சொன்னால், 'உங்க பகல் கனவு பலிக்காது'ன்னு சொல்லிடுவாங்க!

