PUBLISHED ON : பிப் 17, 2026 02:43 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை பேச்சு: மகளிருக்கான உரிமைத்
தொகையை, முன் தேதியிட்டு, மூன்று மாத காலத்திற்கு 3,000 ரூபாய்; கோடைக்கால
நிவாரணமாக 2,000 ரூபாய் என, தேர்தலை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின்
வழங்கியுள்ளார்.
முன்பு அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, ஆட்சிக்கு வந்த
முதல் 28 மாத காலம் கொடுக்காத உரிமைத் தொகையையும், கோடைக்கால நிவாரணம்
போல், குளிர்கால நிவாரணத் தொகையையும் கணக்கிட்டு, முதல்வர் ஸ்டாலின்
வழங்குவாரா? இப்பவே, தமிழக அரசு கிட்டத்தட்ட, 10 லட்சம் கோடி ரூபாய் கடன்ல
தத்தளிச்சிட்டு இருக்கு... அதை ஒரே அடியா ஏற்ற ஐடியா தர்றாரே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேச்சு: 'தமிழகத்தில் தி.மு.க.,வை தவிர யார் ஆட்சி அமைத்தாலும் அது, 'டில்லி ஆட்சி' என, முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். அப்படி டில்லி ஆட்சியாக இருந்தாலும் இருந்துட்டு போகட்டும். 10 ரயில்கள் வேண்டும் என்றால், டில்லியில் தான் கேட்க வேண்டும். இவர்களிடமா கேட்க முடியும்? மத்திய அரசிடம் தான், மாநில அரசு கேட்கும்.
பக்கத்தில் உள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அரசுடன் நெருக்கமா இருந்து எவ்வளவு திட்டங்களை தன் மாநிலத்துக்கு வாங்குறாரு... அந்த மாதிரி, தமிழகமும் முன்னேறிட்டு போகட்டுமே!
தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை: தங்களை ஆதரிக்கும் அணிக்கே, சின்னம், கட்சி என்பதன் வழியே, பலவீனமான கட்சிகளை, பல கூறுகளாக உடைத்து, அவற்றை பா.ஜ.,வே மறைமுகமாக நடத்தி வருகிறது. வில்லங்க சொத்துக்களை குறி வைத்து வியாபாரம் செய்யும், நேர்மையற்ற ரியல் எஸ்டேட் முறையை, அரசியலில் புகுத்தி இருக்கிறது அந்த வட மாநில கம்பெனி.
கடந்த, 1996ல் காங்கிரஸ் கட்சியை உடைத்து, த.மா.கா., என்ற கட்சியை உருவாக்கிய பின்னணியில், தி.மு.க., இருந்தது இவருக்கு தெரியாதோ?
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: மகளிர் வங்கி கணக்கில் டிபாசிட் செய்யப்பட்ட 5,000 ரூபாய், மக்கள் வரிப்பணம் என்பதை அனைவரும் அறிவர். பெண்களை குறைவாக எடை போடாதீர். எதை செய்ய வேண்டுமோ, அதை செய்ய தவறிவிட்டு, அதாவது பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு, சட்டம் - ஒழுங்கு சீர்கேடு போன்றவற்றை சரி செய்யாமல், 'பணம் பாதாளம் வரை பாயும்' என்ற முதலாளித்துவ மனோபாவத்துடன் செயல்படுவது, தி.மு.க.,வுக்கு எதிராகவே திரும்பும். பணம் ஓரிரு நாள் மகிழ்ச்சி தரும்; தீர்ந்த பின் சிந்தனையை துாண்டும்.
இந்த, 5,000 ரூபாய் செலவானதும், தேர்தல் நேர பட்டுவாடாவுக்கு ஆளுங்கட்சியினர் தயாராவே இருக்காங்க!

