PUBLISHED ON : பிப் 19, 2026 03:05 AM

மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி: வரும் சட்டசபை தேர்தல், இரண்டு கொள்கைகளுக்கு இடையிலானது. தமிழக எதிர்காலம் கருதி, தி.மு.க., அரசு நீடிக்க வேண்டும் என்ற பார்வை காங்கிரசுக்கு இருக்க வேண்டும். அதை விடுத்து, தகுதியை மீறி அதிக தொகுதிகள் வேண்டும் என்றெல்லாம் கேட்பது, ஆரோக்கியமாக இருக்காது. முதல்வர் ஸ்டாலின், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், சோனியா இடையே உள்ள புரிதலை யாரும் தடுக்க முடியாது. அதிக தொகுதிகள் வேண்டும் என்பது குறித்து, காங்., இரண்டாம் கட்ட தலைவர்கள் தான் பேசுகின்றனர்.
'தி.மு.க., அரசு நீடிக்கணும்... அதில் நாங்களும் இருக்கணும்'னு தானே காங்கிரசாரும் கேட்கிறாங்க... அதுல எந்த தப்பும் இருக்கிற மாதிரி தெரியலையே!
புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை: கோடைக்கால சிறப்பு நிதி என்ற பெயரில் வழங்கிய மகளிர் உரிமைத்தொகை, சட்ட சபை தேர்தலுக்கு முன் வழங்கப்பட்டதால், இது ஓட்டுக்கான கையூட்டு என, விமர்சிக்கப்படுகிறது. மேலும், பட்டியல் சமூகத்தினரின் கல்வி, தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக, பிரத்யேகமாக செலவிட வேண்டிய நிதியில் இருந்து, மகளிர் உரிமைத்தொகைக்கு மடை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரு குற்றச்சாட்டுகளும் நிதர்சனமானவைகள் தான்.
இந்த, 5,000 ரூபாய் ஆளுங்கட்சியின் கஜானாவில் இருந்து வழங்கப்படலை என்ற நிதர்சனத்தை, அதை வாங்கிய மகளிர் நல்லாவே புரிஞ்சு வச்சிருக்காங்க! தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் பேச்சு: தமிழக மாணவர்களின் கல்வி தரத்தை குறைத்து பேட்டி கொடுத்ததற் காகவும், தமிழக சட்டசபை மாண்பை அவமரியாதை செய்ததையும் கண்டிக்கும் வகையில் தான், கவர்னர் ரவி பங்கேற்ற கோவை, பாரதியார் பல்கலை பட்டமளிப்பு விழாவில் நான் பங்கேற்கவில்லை.
கவர்னர் மீதான காழ்ப்புணர்ச்சியில், கஷ்டப்பட்டு படித்து பட்டம் பெற்ற மாணவர்களை மதிக்காமல் இருப்பது, அமைச்சர் பதவிக்கு அழகா? காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யூ.சி., மாநில தலைவர் பன்னீர்செல்வம் பேட்டி: தமிழக அரசு, பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்தாமல் இருப்பது ஏமாற்று வேலை. கட்டுமானம், ஆட்டோ, பீடி தொழிலாளர்கள் வாரியங்களில், 90 சதவீதம் குறைபாடுகள் உள்ளன. தமிழக அரசிடம், 10,000 கோடி ரூபாய் நிதி இருந்தும், கட்டுமான தொழிலாளர்கள் வாரியத்துக்கு நான்கு மாதங்களாக பணம் அனுப்பவில்லை.
நல்லா விசாரிச்சு பாருங்க... சமீபத்தில் மகளிருக்கு கொடுத்த தலா, 5,000 ரூபாயை அந்த நிதியில் இருந்து குடுத்துட்டாங்களோ, என்னவோ?

