PUBLISHED ON : பிப் 20, 2026 03:05 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: 'நடப்பு ஐந்தாண்டு கால
ஆட்சியே, அடுத்த ஐந்தாண்டு கால தி.மு.க., ஆட்சிக்கான 'புளு பிரின்ட்'
என்கிறார், முதல்வர் ஸ்டாலின். பொதுவாக, 'புளு பிரின்ட்'டுக்கு, 'அப்ரூவல்'
கிடைத்தால்தான் கட்டடம் கட்ட முடியும். வரும் தேர்தலில், மக்களின்
அப்ரூவல் தி.மு.க.,வுக்கு கிடைக்கப் போவதும் இல்லை; ஆட்சி அமைக்கப் போவதும்
இல்லை. தி.மு.க., ஆட்சி நீடிக்காது என்பதற்கு, மக்கள் சந்திக்கும்
சோதனைகளும், படும் வேதனைகளுமே சாட்சி. 'புளு பிரின்ட்'டுக்கு குறுக்கு
வழியில் எப்படி, 'அப்ரூவல்' வாங்குறது என்பது ஆட்சியாளர்களுக்கு நல்லாவே
தெரியும்... அதுக்கான சகல அஸ்திரங்களையும் தேர்தலில் எடுத்து விடுவாங்க,
பாருங்க!
தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் அறிக்கை: தமிழகத்தில், 11.19 என்ற அளவில், இரட்டை இலக்கத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் பெருமை அடித்துள்ளனர். ஆனால், தி.மு.க., வின் எம்.பி.,க்கள் - எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தான் இரட்டை இலக்கத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழ், தமிழர், தமிழகத்தின் வளர்ச்சியை முடக்கி, கடனில் மூழ்கவிட்டுள்ள பட்ஜெட் இது.
சரி விடுங்க... தேர்தலுக்கு பிறகு தே.ஜ., கூட்டணி தானே ஆட்சிக்கு வரும்னு சொல்றீங்க... நீங்க வந்ததும், கடனில் இருந்து தமிழகத்தை மீட்கும் சிறப்பான பட்ஜெட்டை போடுங்களேன்!
மத்திய சென்னை தி.மு.க., - எம்.பி., தயாநிதி பேச்சு: கரூர் மாவட்டம், 'பைனான்ஸ்' துறையில் முதலிடத்தில் உள்ளது. கோவைக்கு சமமாக வளர வேண்டும் என்று உழைத்து கொண்டு இருக்கின்றனர். மாவட்டத்தில், 50,000 கோடி ரூபாய் வர்த்தக இலக்கை வைத்து செயல்படுகிறீர்கள். எனவே, நீங்கள் கோவையுடன் போட்டியிடுவதை விட குஜராத் மாநிலம், ஆமதாபாத்துடன் போட்டியிட வேண்டும்.
பா.ஜ., ஆட்சி நடக்கும் குஜராத்தின் தொழில் வளர்ச்சியை பாராட்டிய இவர் மீது, தி.மு.க., தலைமை கோபம் கொள்ளாதா?
தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் அறிக்கை: ஊரக வேலை திட்ட பணியாளர்களை, தி.மு.க., அரசு வீடு, வீடாக அனுப்பி தன் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துகிறது. இதற்கு மறுப்போரை, பணியில் இருந்து நீக்கி விடுவதாக மிரட்டுகின்றனர். தி.மு.க., அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக் கூட பணமில்லை என ஒருபுறம் அமைச்சர் சொன்னாலும், மறுபுறம், 1.31 கோடி பெண்களுக்கு, 5,000 ரூபாய் வழங்க நிதி எப்படி வந்தது?
இப்படி எல்லாம் வாரி விட்டு தானே, தமிழக அரசின் கடன், 10 லட்சம் கோடி ரூபாயை தாண்டியிருக்கு!

