PUBLISHED ON : ஏப் 23, 2026 12:35 AM

வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை:
விஜய்க்கு கூடும் கூட்டத்தால் தி.மு.க., கூட்டணிக்கும், எங்கள் கட்சிக்கும் எந்தவித பாதிப்பும் கிடையாது. தி.மு.க.,வின் எதிர்ப்பு ஓட்டுகளை அவர் பிரிப்பார் என, நாங்கள் நம்புகிறோம். சினிமா கவர்ச்சி களத்தில் வந்திருக்கும் நிலையில், அ.தி.மு.க.,வை ஆதரிக்கக் கூடிய பெரும்பாலானோர் விஜயை ஆதரிக்கக் கூடும். இது, அ.தி.மு.க., கூட்டணியை பாதிக்கும்.
யார் யாரை விஜய் கட்சி, 'பதம்' பார்த்திருக்கு என்பது, மே 4ல் வெட்ட வெளிச்சமாகிடும்!
அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழக கட்சி தலைவர் சசிகலா பேச்சு: எங்களது கோடநாடு எஸ்டேட் பங்களாவில், கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் இருந்த வாட்ச்மேன் உட்பட எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்... மேலும் ஒருவர், மனைவி, குழந்தைகளுடன் செல்லும் போது விபத்தில் உயிரிழந்திருக்கிறார். இதெல்லாம் எப்படி நடக்கும்... கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டும். சினிமா போல, 'டக் டக்' என, உயிர்கள் போயுள்ளன. மேலே ஒருவன் இருக்கிறான்; அவர் களிடம் இருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது.
கோடநாடு எஸ்டேட் கொள்ளை சம்பவத்தில், முன்னாள் முதல்வர் பழனிசாமி மீது நீங்க குற்றம்சாட்டுவது தெளிவாகவே தெரியுது... ஆனா, உங்களை அவர் கட்சியில சேர்த்திருந்தால், இப்படி சாபம் விட்டிருப்பீங்களா?
தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி பேச்சு:
'பெண்களுக்கு, 33 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தால் தி.மு.க., ஆதரிக்கும். 'இன்றைய பசிக்கு, இருப்பதை பகிர்ந்து கொடுங்கள்' என, நாங்கள் சொல்கிறோம். ஆனால், 'புதிதாக பானை வைத்து சமைத்து கொடுக்கிறோம்' என சொல்வது, எங்களுக்கு வேண்டாம். தமிழகத்தின் உரிமைகளை பறிக்க நினைத்தவர்களுக்கு, தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர்.
'பழைய சோறுக்கு பதிலாக, புதுசா சுடச்சுட சாப்பாடு போடுறோம்'னு சொல்றதை ஏன் வேண்டாம்னு மறுக்குறீங்க?
தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை:
தி.மு.க., - காங்., கூட்டணி, பொருந்தா கூட்டணியாக தேர்தலை சந்திக்கிறது. ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலினும், ராகுலும் ஏறவே இல்லை. அவர்களுக்குள் நடக்கும் பனிப்போர், வெட்ட வெளிச்சத்திற்கு வந்து விட்டது. தேர்தல் முடிவுக்கு பின் தேசிய அளவில், 'இண்டி' கூட்டணி உடையும். தமிழகத்தில் தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரசும் வெளியேறும்.
தமிழகத்திற்கு வேண்டா வெறுப்பாகவே ராகுல் வந்து பிரசாரம் பண்ணிட்டு போயிருக்கார் என்பதே, நீங்க சொல்றதை உறுதிப்படுத்துதே!

