PUBLISHED ON : மே 24, 2026 12:00 AM

தமிழக பா.ஜ.,வில் இருக்கும் நடிகை கஸ்துாரி பேட்டி: விஜய் ஆட்சியில் நல்ல எண்ணங்கள் உள்ளன. அதை செயல்படுத்த அவகாசமும் கொடுக்க வேண்டும். அரசியல்வாதிகள் மாறலாம்; அதிகாரிகள் மாறுவதில்லை. ஆட்சி மாறலாம்; காட்சிகள் மாற நேரமாகும். எல்லாருமே புது எம்.எல்.ஏ.,க்கள். அவர்கள், இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும். பா.ஜ.,வுடன் இணக்கமாக போவது நல்லது. மத்திய அரசை எதிர்த்து, தேவையில்லாத முரண்பாடுகளில் விஜய் சிக்க மாட்டார் என நம்புகிறேன். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு போல, மத்திய அரசுடன் இணக்கமா இருந்து தமிழகத்துக்கான திட்டங்கள், நிதியை கேட்டு பெறுவதில் தான், விஜயின் நிஜமான வெற்றி அடங்கியிருக்குது!
தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா பேச்சு: தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை நாங்களும் வரவேற்கிறோம். ஆனால், அது ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான மாற்றமாக இருக்க வேண்டும். ஆட்சி அமைக்க மெஜாரிட்டி இல்லாத நிலையில், எல்லோரையும் அழைத்து அமைச்சர் பதவிகளை அள்ளி கொடுப்பது குதிரை பேரத்திற்கு வழிவகுத்துவிடும். 'மெஜாரிட்டி' இல்லாமல், ஆதரவளிக்கும் கட்சிகளுக்கெல்லாம் அமைச்சர் பதவி கொடுப்பது தவறான முன்னுதாரணம்.
அது சரி... ஒரு எம்.எல்.ஏ.,வா இருக்கும் தனக்கும் அமைச்சர் பதவி தந்திருக்கலாமே என்ற இவங்க ஆதங்கம் நல்லாவே தெரியுது!
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேட்டி: த.வெ.க., அமைச்சரவையில் காங்., சேர்ந்ததால், கூட்டணி அரசாக மாறியுள்ளது. தி.மு.க., -- அ.தி.மு.க., கூட்டணி அரசு அமைக்க முயன்றது குறித்த திரைமறைவு சம்பவம் பற்றி எனக்கு தெரியாது. த.வெ.க., ஆட்சி செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்க ஆறு மாதங்கள் அவகாசம் வேண்டும். 'இது ரியல் ஆட்சி அல்ல; ரீல்ஸ் ஆட்சி' என்ற தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் விமர்சனம், அவரது நிலைப்பாடு. அது குறித்து என்னிடம் கேட்டால், 'நோ ரியாக் ஷன்' என்பேன்.
இவரது கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ஸ்டாலின் ஒன்று சொன்னால், கண்களை மூடிட்டு, 'ஆமாம் சாமி' போடும் இவரது சுருதி மாறுவது, ஏகப்பட்ட சந்தேகங்களை எழுப்புதே!
------ தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை: சனாதன தர்மத்தை பற்றி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசுகிறார். த.வெ.க., அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அந்த கட்சியின் எம்.எல்.ஏ., முஸ்தபாவும் இதுபோன்றே பேசுகின்றனர். முதல்வர் விஜய் அதை கண்டிக்க வேண்டும். மீண்டும் மீண்டும் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி கொண்டே இருந்தால், உங்களுக்கு ஓட்டு போட்டவர்கள் கூட வருத்தப்படுவர்.
ஹிந்துக்களுக்கு எதிராக செயல்பட்ட தி.மு.க.,வுக்கு ஏற்பட்ட தோல்வியை, த.வெ.க., தலைமை உணர்ந்து செயல்படணும்!
