PUBLISHED ON : மே 28, 2026 12:00 AM

தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் காந்திராஜ் பேட்டி: கடந்த ஆட்சியை போல
அல்லாமல், எவ்வித ஊழலும் அற்ற பூஜ்ஜிய ஊழல் ஆட்சி என்ற இலக்கை நோக்கி, இந்த
அரசு வெளிப்படை தன்மையுடன் செயல்படும். ரேஷன் கடைகளில் செயற்கை நுண்ணறிவு
போன்ற புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவது குறித்தும், கூட்டுறவு துறையில்
காலி பணியிடங்களை விரைந்து நிரப்புவது குறித்தும், துறை ரீதி யான ஆய்வுகள்
தொடர்ந்து நடந்து வருகின்றன. ரேஷன் கடைகளில் தரமான அரிசி, பருப்பு, சமையல்
எண்ணெய் வழங்கினாலே, த.வெ.க., அரசுக்கு, ஏழை எளிய மக்களின் ஆதரவு இன்னும்
அதிகரிக்கும்!
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேட்டி: தமிழக வெற்றிக் கழகம் அமைச்சரவையில் இரண்டு பிராமணர்கள் இடம் பெற்றது தவறில்லை. அதே பிராமணர் சமுதாயத்தை சேர்ந்த ஜெயலலிதா, தமிழக முதல்வராக இருந்தார். சமூக நீதி காத்த வீராங்கனை பட்டம் பெற்று, அ.தி.மு.க.,வுக்கு தலைமை ஏற்று ஆட்சி நடத்தினார். த.வெ.க.,வுடன் எனக்கு எந்த நெருக்கமும் இல்லை. த.வெ.க., செயல்பாடுகள் போக போகத்தான் தெரியும்.
இத்தனை வருஷங்களா சமூக நீதி பேசிய திராவிட கட்சிகள் செய்யாத சாதனையை, அரசியலுக்கு ரொம்பவே புதியவரான விஜய் செய்திருப்பது நிஜமாவே பாராட்டுக்குரிய விஷயம் தான்!
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த, ஆரணி ஒன்றிய அ.தி.மு.க., முன்னாள் செயலர் கஜேந்திரன் பேச்சு: அ.தி.மு.க.,வின் கொள்கை கோட்பாடுகளுக்கு மாறாக, கட்சியை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் விதமாக, தி.மு.க.,வுடன் இணைந்து ஆட்சி அமைக்க பழனிசாமி முயற்சித்ததால் விலகினேன். தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன், மக்கள் விரும்பும் நல்லாட்சி நடத்தும் முதல்வர் விஜயை தலைவராக ஏற்று, த.வெ.க.,வில் இணைந்ததை பிறவி பயன் எடுத்ததாக கருதுகிறேன்.
ஒருவேளை தி.மு.க., ஆதரவில் பழனிசாமி முதல்வராகியிருந்தால், ஆளுங்கட்சியின் ஒன்றிய செயலர் என்ற அந்தஸ்தில் இருந்து இவர் விலகியிருப்பாரா?
தமிழக காங்., மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை: த.வெ.க., வெற்றியால், தமிழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் ஆன்ம பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பல கட்சிகள் அந்த பணியை துவங்கி விட்டன. தமிழகம் முழுதும் ஒரு பெரிய அரசியல் மற்றும் சமூக ஆய்வை நடத்தி, விடை தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.ஜாதி, மதம், பெரும் பணம் என, இதுவரை தமிழக தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த விஷயங்களை த.வெ.க.,வின் வெற்றி அடித்து நொறுக்கி விட்டது.
வாஸ்தவம் தான்... ஓட்டுக்கு பணம் என்ற மிகப்பெரிய ஜனநாயக சீர்கேடு இனி தமிழகத்தில் தலையெடுக்காது!
