PUBLISHED ON : ஜூன் 03, 2026 12:03 AM

பா.ஜ., மகளிர் அணி தேசிய செயலர் வானதி சீனிவாசன் அறிக்கை:
சென்னை கோயம்பேடு தனியார் மதுபான விடுதியில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண் மீது காரை ஏற்றி கொன்ற சம்பவமும், துாத்துக்குடியில் கஞ்சா மற்றும் மது போதையில் பெட்ரோல் பங்க்கை வாலிபர்கள் அடித்து நொறுக்கிய சம்பவமும் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன. கடந்த ஆட்சியில் நடந்த சம்பவங்கள் இந்த ஆட்சியிலும் தொடர்வது தான், விஜய் ஆட்சியின் நிகழ்கால சாதனை.
நள்ளிரவில் மதுபான விடுதியில் இளம்பெண்கள் மது குடிக்கிற அளவுக்கு சமுதாய சீரழிவுகளுக்கு காரணமான சினிமாக்களையும் இவங்க கண்டிச்சா நல்லாயிருக்கும்!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
நெதர்லாந்தில் பாதுகாக்கப்பட்டு வந்த ஆனைமங்கலம் செப்பேடுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது, தமிழர் வரலாறு மற்றும் பண்பாட்டு மரபுகளை மீட்டெடுக்கும் முக்கியமான நடவடிக்கை. சோழர்களின் கடல் வாணிபம், நிர்வாகத் திறன், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று செய்திகள் இந்த செப்பேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழர் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் இந்த அரிய வரலாற்று சின்னங்களை மீட்டெடுக்க நடவடிக்கை மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு நன்றி. வெளிநாடுகளில் உள்ள தமிழர் வரலாற்று, பண்பாட்டு சின்னங்களை மீட்க, மத்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மத்திய பா.ஜ., அரசை விமர்சனம் பண்ணிட்டே இருக்கும் தி.மு.க., தரப்பு, இது பத்தி ஒரு வார்த்தை கூட பேசலையே!
தி.மு.க., முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பேச்சு:
இந்த தேர்தலில், சென்னை கொளத்துார் தொகுதியில் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட தோல்வி, தி.மு.க.,வினரின் ஆழ்மனதில் மாறா வடுவாக பதிந்துள்ளது. தி.மு.க., தொண்டர்களை தாண்டி பொதுமக்களிடத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒருவரை முதல்வராக்காமல் விட்டு விட்டோம் என்ற எண்ணம் பொதுமக்களின் மனதில் ஏற்பட்டிருக்கிறது.
அப்படி என்றால், அடுத்து நடக்க இருக்கும் ஐந்து தொகுதிகள் இடைத்தேர்தலில், ஏதாவது ஒன்றில் ஸ்டாலின் களமிறங்குவாரா?
த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி: மக்கள் மாற்றத்தை விரும்பியதால், தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ளது. குறுகிய காலத்தில் ஆட்சிக்கு வந்தவர்களில், 99 சதவீதம் பேர் புதியவர்கள். பல துறைகளை சார்ந்த இவர்கள், முதல் முறையாக அமைச்சரவை பொறுப்பில் செயல்பட துவங்கி யுள்ளனர். அவர்களுக்கு கால அவகாசம் கொடுப்பது தான் ஆரோக்கியமான அரசியல்.
எடுத்ததுமே நிர்வாகத்தை புரிஞ்சுக்கிறது ரொம்ப கஷ்டம் தான்... மூத்த அரசியல் தலைவரான இவர் சொல்வது போல, த.வெ.க., அரசுக்கு கால அவகாசம் தரணும்!
