PUBLISHED ON : ஜூலை 29, 2026 12:00 AM

பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர், நடிகர் சரத்குமார் பேட்டி:
காவல் துறையில் சேர வேண்டும் என்றால், உடல்தகுதி தேர்வு இருப்பதை போன்று மருத்துவர்களாக, 'நீட்' தேர்வு அவசியம் தான். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது, 13 முறை வினாத்தாள்கள் கசிந்திருக்கின்றன. இது ஒன்றும் நடக்காத சம்பவம் கிடையாது. அதற்காக, நீட் தேர்வே இருக்கக்கூடாது என்று சொல்வது நியாயம் இல்லை.
வாஸ்தவம் தான்... நீட் தேர்வு ரத்து என்பது, மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதையாகிடும்.
பா.ஜ., விவசாய அணியின் தமிழக தலைவர், ஜி.கே.நாகராஜ் அறிக்கை:
இலங்கை, வங்கதேசம், நேபாளம் போன்ற நாடுகளில் நடந்த போராட்டங்களை போல, 'ஜென்சி' என்ற பெயரில் இந்தியாவிலும் போராட்டத்தை துாண்டி, இந்திய இறையாண்மைக்கு சவால் விடுக்கலாம் என்ற அந்நிய சக்திகளின் கனவு, இந்தியாவில் ஒரு போதும் நிறைவேறாது.
வலுவான ஜனநாயகத்தின் பின்னணியோடு, 140 கோடி மக்களின் இதயங்களில் அமர்ந்து, பிரதமர் மோடி இந்தியாவை ஆட்சி செய்கிறார். அந்நிய சக்திகளுக்கு ஆதரவளித்தால், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கழுதை தேய்ந்த கட்டெறும்பு கதையாக காணாமல் போய்விடும்.
காங்., - கம்யூ., கட்சிகள், இப்பவே காணாமல் போன மாதிரி தான் இருக்காங்க... தி.மு.க., போன்ற மாநில கட்சிகளுக்கும் சீக்கிரமே இந்த நிலை வரக்கூடும்!
தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கத்தின் தலைவர், சந்திரன் ஜெயபால் அறிக்கை:
முதல்வர் விஜய், தமிழகத்தில் போதை ஒழிப்பு, லஞ்ச ஒழிப்பு போன்ற மக்கள் விரோத தீய சக்திகளை ஒழித்து வருகிறார்; மாணவர்களின் கல்வி, ஒழுக்கத்தில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்; பள்ளிகளுக்கான முதல்வர் காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயரை சூட்டி, சிறந்த தலைமை பண்புக்குரியவராக விளங்குகிறார்.
அதனால தான், 'இரண்டாவது எம்.ஜி.ஆராக விஜய் உருவெடுத்துடுவார்'னு, எதிர்க்கட்சியினர் பயப்படுறாங்களோ?
துாத்துக்குடி தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேட்டி:
'நீட்' தேர்வு பிரச்னைக்காக போராடிய மாணவர்கள், அடுத்து, 'மாநில பட்டியலுக்கு கல்வியை கொண்டு வர வேண்டும்' என்ற கோரிக்கையை வைத்திருக்கின்றனர். தி.மு.க., தொடர்ந்து முன்வைக்கக்கூடிய கோரிக்கையும் இது தான். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வந்தால், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான எல்லா வாய்ப்புகளும் நிச்சயமாக இருக்கின்றன.
கடந்த, 1999ல் துவங்கி, 2014 வரை, 15 ஆண்டுகள் மத்திய கூட்டணி அரசுகளில் மாறி மாறி நீங்க அங்கம் வகித்தப்ப, கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர, துரும்பையாவது கிள்ளி போட்டீங்களா?
