PUBLISHED ON : ஜூலை 28, 2026 12:00 AM

த.மா.கா., தலைவர், வாசன் பேட்டி:
மேகதாது அணை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இதனால், தமிழக டெல்டா மாவட்டங்களில் பாசன நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. காவிரி நீர் பிரச்னைக்கு தீர்வு காண, கர்நாடக முதல்வர் சிவகுமாரை, தமிழக முதல்வர் விஜய் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது; இது வரவேற்கத்தக்கது. இது வெற்றி பெறும். புதிய அரசின் இம்முயற்சி, விவசாயிகளின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக உள்ளது.
விஜய் முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் எல்லாம் கடும் எதிர்ப்பு தெரிவிச்சாலும், டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு, காவிரி பிரச்னையின் தீவிரம் நல்லாவே தெரியும் என்பதால வரவேற்பு தெரிவிச்சிருக்காரு!
பா.ஜ., தமிழக தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவின் அமைப்பாளர், அர்ஜுன மூர்த்தி பேச்சு:
நாட்டை மாற்ற விரும்பும் தலைமை, முதலில் தங்களை பின்பற்றுவோரின் அரசியல் பண்பாட்டை மாற்ற வேண்டும். அரசியலில் வெற்றி என்பது, வெறும் ஓட்டு சதவீதங்களால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. சரியான நேரத்தில் எடுக்கப்படும் அரசியல் முடிவுகள், கூட்டணி வலிமை, தலைமை தத்துவத்தின் முதிர்ச்சி மற்றும் வெற்றியை இலக்காக கொண்ட நடைமுறைகள் தான் இறுதி முடிவை நிர்ணயிக்கின்றன.
இவர், த.வெ.க.,வை தான் மறைமுகமா குத்திக்காட்டுறார் என்பது தெளிவா தெரியுது!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், சீமான் பேச்சு:
சபரிவர்மன் என்ற சிறைவாசி அடித்து கொல்லப்பட்ட ரணத்தின் சுவடு மறைவதற்குள்ளாகவே, அருணாச்சலம் என்ற விசாரணை கைதி, காவல் நிலையத்தில் அடித்து கொல்லப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. மூன்று மாதங்கள் கூட நிறைவு செய்யாத த.வெ.க., ஆட்சியில், நான்கு சிறைவாசிகளின் காவல் மரணங்கள், மாநில அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகின்றன.
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்துக்கு காரணமான ஒன்பது போலீசாருக்கு மரண தண்டனை விதித்தும், நம்ம போலீசார் திருந்த மாட்டேங்கிறாங்களே!
அ.தி.மு.க.,வில் இருந்து விலகிய, முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை:
மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை முறை என்பது, அரசின் கொள்கை முடிவு. 'நீட்' முறையை ரத்து செய்து, மாற்றுமுறை ஒன்றை கொண்டு வந்தால், உச்ச நீதிமன்றம் அதை ஆட்சே பிக்காது. பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்ணோடு, நுழைவுத் தேர்வுக்கென்று குறிப்பிட்ட மதிப்பெண்ணை நிர்ணயித்து தேர்வு நடத்தி, அதில் பெறும் மதிப் பெண்ணையும் சேர்த்து கணக்கிட்டு, மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை நடத்தினால், எந்த பிரச்னையும் இருக்காது.
என்ன தான் புதுசு புதுசா யோசித்து வழிமுறைகளை கொண்டு வந்தாலும், முறைகேடு களில் ஊறிப் போனவங்க அங்கயும் ஒரு குறுக்கு வழியை கண்டுபிடிச்சிடுவாங்களே!
