PUBLISHED ON : ஆக 05, 2026 12:00 AM

பா.ஜ., தமிழக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பேச்சு:
முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா பற்றிய தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதியின் இரட்டை அர்த்த பேச்சு, அருவருப்பானது மற்றும் வெட்கக்கேடானது. எந்தத் தாயும், மனைவியும், மகளும், அப்படி பேசுபவர்களை மன்னிக்க மாட்டார். திராவிட மாடல் என தங்களை அழைத்துக் கொள்ளும் இவர்கள், பொதுவெளியில் இப்படி பேசுவது அவமானகரமானது. இத்தகைய பேச்சுக்காக உதயநிதியை கைது செய்வது, முதல்வர் விஜய்க்கு அதிக நற்பெயரை பெற்றுத் தரும்.
தி.மு.க., - த.வெ.க., இரண்டு கட்சிகளுமே பா.ஜ., எதிர்ப்பில் தீவிரமாக இருந்தாலும், நியாயத்தை பேசும் இவரை பாராட்டியே ஆகணும்!
தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி:
தமிழக மின் துறை அமைச்சர் நிர்மல்குமார், பல கட்சிகளுக்கு சென்று வந்தவர். அவருக்கு காவிரி, மேகதாது பிரச்னைகள் குறித்தோ, அரசியல் குறித்தோ எதுவும் தெரியாது.
'எல்லா கட்சிகளுக்கும் போன நிர்மல்குமார், நம்ம கட்சிக்கு மட்டும் வராம போயிட்டாரே'ன்னு வருத்தப்படுறீங்களோ?
தமிழக மின் துறை அமைச்சர், த.வெ.க.,வைச் சேர்ந்த நிர்மல்குமார் பேச்சு:
தற்போதைய த.வெ.க., அரசு அமைய, மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் முக்கிய பங்காற்றினர். இதனால், அவர்களின் முன்னேற்றத்திற்கான பல்வேறு நலத்திட்டங்களை, முதல்வர் விஜய் செயல்படுத்தி வருகிறார். பெண்களுக்கு தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்க, தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கவும், அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
நல்லா செய்யுங்க... அதேநேரம், பூரண மதுவிலக்கு கொண்டு வருவதும், பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் என்பதையும் கொஞ்சம் யோசியுங்க!
பா.ஜ., உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அறிக்கை:
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவின் பார்லிமென்ட் பேச்சு தொகுப்பு நுாலில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காலத்தில் நடந்த போபர்ஸ் ஊழல் வழக்கு, போபால் விஷவாயு மரணங்கள் குறித்து காங்கிரசையும், அதற்கு காரணமான ராஜிவ், சோனியா குடும்பத்தையும் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். இலங்கை தமிழர் விவகாரத்தில் எடுத்த தவறான நடவடிக்கைகள் குறித்து சோனியா, ராகுலை கடுமையாக பேசி தாக்கியுள்ளார். இப்படி, 70 சதவீதம் காங்கிரஸ் கட்சியின் அக்கால நடவடிக்கைகள் மீதான விமர்சனமாகவே, அந்தத் தொகுப்பு வைகோவால் எழுதப்பட்டுள்ளது.
'உங்க கட்சியை விமர்சனம் செய்த வைகோவை, த.வெ.க., கூட்டணியில் இருந்து கழற்றி விடுங்க'ன்னு, காங்கிரசை உசுப்பேற்ற பார்க்கிறீங்களோ?
