PUBLISHED ON : ஆக 06, 2026 01:21 AM

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு:
முதல்வர் விஜய், தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றி வருகிறார். முதல்வரைப் பார்த்து, ஒவ்வொரு அமைச்சரும் போட்டி போட்டு செயல்படுகின்றனர். நல்லவர் ஆட்சியில் மழை பெய்யும் என்பது போல, முதல்வரின் நல்லாட்சியில் ஆடிப்பெருக்கின்போது காவிரி யில் தண்ணீர் வருகிறது. அவர் சிறந்த, துாய்மையான ஆட்சியை வழங்கி வருவதையும், இந்தியாவுக்கு தமிழகம் முன்னோடி மாநில மாகத் திகழ்வதையும் பார்க்க முடிகிறது. மத்திய அரசு கூட தமிழகத்தை வியந்து பாராட்டும் வகை யில், விஜயின் த.வெ.க., ஆட்சி நடந்து வருகிறது.
ஜெயலலிதா ஆட்சியில் இவர் அமைச்சராக இருந்தப்ப, அவரைப் பாராட்டிய அதே வார்த்தைகளை எடுத்து, முதல்வர் என்ற இடத்தில் மட்டும் விஜய் பெயரை நிரப்பி பாராட்டித் தள்ளுறாரோ?
தி.மு.க., முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு:
பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து த.வெ.க., வெற்றி பெற்று உள்ளது; மதத்தின் பெயராலும், ஜாதியின் பெயராலும் ஓட்டுகளை பிரிக்கும் வேலையை செய்துள்ளது. தி.மு.க., கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற கட்சிகள், த.வெ.க., அரசுக்கு முட்டு கொடுத்து வருகின்றன. அக்கட்சிகள் விலகினால், த.வெ.க., அரசு கீழே விழுந்து விடும்.
'பொய் வாக்குறுதிகள் கொடுத்து, ஆட்சிக்கு வரும் வித்தைக்கு நாங்க காப்புரிமை வாங்கி வச்சிருக்கோம்... அதையே, த.வெ.க.,வும் செய்யக்கூடாது'ன்னு, சொல்லாம சொல்றாரா?
கடலுார் காங்., - எம்.பி., விஷ்ணுபிரசாத் பேட்டி:
மேகதாது அணை கட்டும் பிரச்னையை கையாள்வதில், ஒவ்வொருவருக்கும் ஒரு அணுகுமுறை இருக்கும். காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, 1924ல் போட்ட ஒப்பந்தத்தை, 1974ல் புதுப்பிக்கத் தவறியது யார்? இத்தனை ஆண்டுகள் அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தி, என்ன தீர்வு கண்டனர்.
கடந்த, 1974ல் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க., அரசை நீங்க குறை சொல்றீங்க... அப்ப, மத்தியில் இருந்த உங்க காங்., ஆட்சிக்கும் இதில் பங்கிருக்கே!
அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் உதய குமார் பேட்டி: இடைத்தேர்தல் தடையை நீக்கக் கோரி, முன்னாள் அமைச்சர்கள் விராலிமலை - விஜயபாஸ்கர், கரூர் - விஜயபாஸ்கர் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, இரவு, பகல் பாராமல் பிரசாரம் செய்து, அவர்களை எம்.எல்.ஏ.,க்களாக் கினார். ஆனால், என்ன காரணத்துக்காக இருவரும் ராஜினாமா செய்தனர்?
'அ.தி.மு.க., என்ற கப்பலில் இனியும் பயணித்தால் மூழ்கிடு வோம்'னு, 'டாட்டா' காட்டிட்டாங்க... அவ்வளவு தான்!
