PUBLISHED ON : ஆக 30, 2026 01:41 AM

பா.ஜ., தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவின், தமிழக தலைவர் அர்ஜுனமூர்த்தி அறிக்கை:
நேபாளத்தில் நிகழ்ந்துள்ள இந்த பேரிடர், உலகையே ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கைக்கு அப்பால், இந்தியாவின் பல வீடுகளில் இன்று அமைதியாக மிகப் பெரிய மனித சோகம் அரங்கேறி கொண்டிருக்கிறது. புனித பயணம், மக்கள் உயிர்களுக்கான பிரார்த்தனையாக மாறியிருக்கிறது; நேபாளத்திற்கு நம் பிரார்த்தனை தேவை.
இயற்கை ஒரு நிமிடம் சீறினால், மனிதர்களால் எதுவும் பண்ண முடியாது என்பதற்கு, நேபாள பேரிடரே சாட்சி!
தமிழக முன்னேற்ற காங்கிரஸ் என்ற கட்சியின் தலைவர் அருள்தாஸ் பேட்டி: தமிழக சட்டசபையில் நிதி அமைச்சர் மரிய வில்சன், 'நானே என் கையால் முன்னாள் அமைச்சர் மகேஷிடம் லஞ்சம் கொடுத்தேன்' என, பகிரங்கமாக தெரிவித்தார். 'லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்' என, சட்டம் சொல்கிறது. 'நான் ஆட்சிக்கு வந்தால் லஞ்சத்தை ஒழிப்பேன்' என, வீரவசனம் பேசி ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய், லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக்கொண்ட நிதி அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காப்பது ஏன்?
முதல்ல, லஞ்சத்தை கைநீட்டி வாங்கிய மகேஷ் மீது நடவடிக்கை எடுக்க சொல்ல மாட்டேங்கிறாரே!
தமிழக பா.ஜ., நிர்வாகியும், மூத்த வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பேட்டி: முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் சுயசரிதை இதுவரை ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் நுாலாக வெளிவந்துள்ளது. அந்நுாலை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆந்திர மாநிலம், குப்பம் திராவிட பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை தலைவர் கணேசமூர்த்தி உதவியால் அப்பணி நிறைவடைந்தது. விரைவில் சென்னையில் நுால் வெளியீட்டு விழா நடக்கும்.
வெங்கையா நாயுடு சுயசரிதை, அரசியலுக்கு வர துடிக்கும் இன்றைய, 'ஜென் ஸீ' இளைஞர் பட்டாளத்துக்கு உந்து சக்தியா இருக்கும்!
தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா அறிக்கை:
'விழுப்புரம் நந்தன் கால்வாய் திட்டத்திற்கு நிதி மட்டும் ஒதுக்கப்பட்டு, பணிகள் துவங்க வில்லை' என, சட்டசபையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியது தவறானது. சாத்தனுார் அணை முதல், கீரனுார் தடுப்பணை வரை 16.40 கி.மீ.,க்கு கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கி, நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்கு சிறப்பு தாசில்தார் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது சி.வி.சண்முகத்திற்கு தெரியாமல் போனது ஏன்?
நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கிட்டாலே, கால்வாயில் தண்ணீர் வந்துடும்னு சொல்ல வர்றீங்களா?
