PUBLISHED ON : ஆக 20, 2026 12:55 AM

அ.தி.மு.க.,வில் இருந்து விலகிய, முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை:
கடந்த 1967ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூபாய்க்கு மூன்று படி அரிசி' என, அண்ணாதுரை அறிவித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்த பின், 'மூன்று படி அரிசி லட்சியம்; தற்போது ஒரு படி நிச்சயம்' என்று விளக்கம் அளித்து, ரூபாய்க்கு ஒரு படி அரிசி திட்டத்தை அமல்படுத்தினார்; அதையும் மக்கள் ஏற்றுக் கொண்டனர். நிதி நிலைமைக்கேற்ப சாத்தியமானதையே ஓர் ஆட்சி செய்ய முடியும்; இது, ஆண்ட கட்சிகளுக்கும் தெரியும். எனவே, 'கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்' என, தற்போதைய அரசை நிர்பந்திப்பது ஏற்புடையதல்ல.
நீங்க சொல்றது சரிதான்... ஆனா, ஆளுங்கட்சிக்கு எதிராக அரசியல் செய்ய, எதிர்க்கட்சிகளுக்கு வேற பிரச்னைகள் எதுவும் இல்லையே!
தி.மு.க., செய்தி தொடர்புக் குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை:
அடிக்கடி முகத்தை காட்டுனா தான் அழகு இல்லைங்கிறதும், அடிக்கடி வாயை திறந்தா, தனக்கு அறிவு இல்லைங்கிறதும் தெரிஞ்சிடும்னு தான், சிலர் மறைவாகவும், மவுனமாகவும் இருந்து, லாவகமாக காலத்தையும், களத்தையும் நகர்த்துகின்றனர்.
'குறைகுடம் தளும்பும்; நிறைகுடம் தளும்பாது' என்ற பழமொழியை நீங்க படிச்சது இல்லையோ?
தி.மு.க., துணை பொதுச் செயலர் கனிமொழி பேட்டி:
கர்நாடக வனத்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், மூன்று தமிழர்களின் உயிர்கள் பறிபோயுள்ளன. உயிரை பறிப்பதற்கு எந்த அரசுக்கும், அதிகார அமைப்பிற்கும் உரிமை கிடையாது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்குவதோடு, இந்த சம்பவத்தில் உண்மை நிலையை வெளிக் கொண்டு வரும்படி, கர்நாடக அரசிற்கு அழுத்தம் தர வேண்டும்.
'இது சம்பந்தமா, தமிழக தலைவர்கள் வாயை திறக்க வேண்டாம்'னு, கர்நாடக முதல்வர் சிவகுமார் உத்தரவு போட்டிருக்காரே... அதை கண்டிச்சு போராட்டம் நடத்துவீங்களா?
அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் உதய குமார் பேட்டி:
இளம் தலைமுறையினரை எப்படி ஈர்ப்பது என்பது விஜய்க்கு நன்றாக தெரிந்திருக்கிறது; அதற்காக, அவரை பாராட்ட வேண்டும். நாங்கள் மக்களின், 'லைப்' பற்றி பேசினோம். த.வெ.க., வினர், 'லைக்ஸ்' வாங்க பேசினர். நாங்கள், 'ரியாலிட்டி'யாக பேசினோம். அவர்கள், 'ரீல்ஸ்'க்காக பேசினர். எனவே, அ.தி.மு.க., தேர்தலில் தோற்றாலும், மக்களுக்கு சேவை செய்வதில் ஒரு போதும் தோற்காது. அனைத்து தளங்களிலும் கட்சியை வலுப்படுத்துவோம்.
த.வெ.க.,வை சமாளிக்கணும் என்றால், உங்களை மாதிரி பழம் பெரும் தலைவர்கள் எல்லாம் விலகி, உங்க கட்சியில் இளைஞர்களுக்கு வழிவிடுவீங்களா?
