PUBLISHED ON : செப் 05, 2026 12:54 AM

காங்கிரஸ் தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் பேட்டி:
முதல்வர் விஜய் நல்லாட்சி நடத்தி வருகிறார்; அவர் முதல்வராக தொடர வேண்டும். ஊழலற்ற ஆட்சி, நேர்மையான ஆட்சியை தொடர்ந்து தர வேண்டும். அதற்கு காங்கிரஸ் துணை நிற்கும். ராகுலுக்கும், விஜய்க்கும் உள்ள உறவு சகோதரத்துவமான உறவாக இருக்கிறது. இருவருக்கும் இடையேயான உறவு பலமாக இருக்கிறது. ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் என்பது காங்., கட்சியின் நிலைப்பாடு; அதில் எந்த மாற்றமும் கிடையாது.
'முதல்வர் விஜயின் நல்லாட்சியை தமிழகத்தோட முடிச்சுக்கணும்... இந்திய அளவில் நல்லாட்சி தர நினைக்கக்கூடாது'ன்னு, சுத்திவளைச்சு சொல்றீங்களோ?
அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேட்டி:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது, ஊழல் வழக்கு தொடர்ந்து, அவரை சிறையில் தள்ளியதாக, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தேவையின்றி விமர்சனம் செய்துள்ளார். அவருக்கு, 'பெட்டிஷன்' போடுவதும், 'கேஸ்' போடுவதும் தான் வேலை; அதற்காகவே அவரை தி.மு.க.,வில் வைத்துள்ளனர். பாரதி எப்போதும் பொய்யை தவிர வேறு எதையும் பேசியதில்லை.
'தி.மு.க., - அ.தி.மு.க., இடையே ரகசிய கூட்டணி இருக்கு'ன்னு, த.வெ.க.,வினர் குற்றஞ்சாட்டுறாங்களே... அப்படி எல்லாம் இல்லன்னு காட்டிக்க, ஆர்.எஸ்.பாரதி இப்படி எல்லாம் பேசுறாரோ?
தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வும், தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலருமான மயிலை வேலு அறிக்கை: வளர்ச்சி திட்டங்கள் என்பது, ஆட்சி மாறும்போது ரத்து செய்யப்படும் அரசியல் அறிவிப்புகள் அல்ல; மக்களின் வரிப்பணத்தில் உருவாகும் எதிர்கால முதலீடு கள். ஏற்கனவே திட்டமிடப்பட்ட பணிகளை ரத்து செய்து விட்டு, புதிய அறிவிப்புகளை வெளி யிடுவது வளர்ச்சி அல்ல; நிர் வாக திறமையற்ற, நிலையற்ற தன்மையின் வெளிப்பாடு.
கடந்த 2021ல் நீங்க ஆட்சிக்கு வந்தப்ப, அ.தி.மு.க., அரசின் தாலிக்கு தங்கம், மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் திட்டங்களை எல்லாம் ரத்து பண்ணியதை மறந்துட்டீங்களா?
த.மா.கா., பொதுச்செயலர் ஜி.ஆர்.வெங்கடேஷ் பேச்சு:
தமிழக அரசியலில் எம்.எல்.ஏ., பதவி, தேசிய அரசியலில் எம்.பி., பதவி மட்டுமே வகித்தவர் மூப்பனார். மத்திய அமைச்சர், முதல்வர், பிரதமர் போன்ற பதவிகள் அவரை தேடி வந்தாலும், அவற்றை விரும்பாமல், அரசியலில் மதிப்பை பெற முடியும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் அவர்.
'கடந்த 1996ல் மூப்பனாரை தேடி பிரதமர் பதவி வந்தப்ப, அதை தடுத்தது தி.மு.க., தான்'னு ஒரு குற்றச்சாட்டு இருக்கே... அது உண்மையா, இல்லையான்னும் இவர் சொல்லியிருக்கலாமே!
