PUBLISHED ON : செப் 10, 2026 01:27 AM

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி தலைவர் ஜான் பாண்டியன் பேட்டி:
முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில், 'ரெய்டு' நடத்துவது நாடகம். த.வெ.க.,வில் இணைந்து உ ள்ள முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் ஊழல்வாதிகள் இல்லையா? இவர்களை கட்சியில் சேர்த்துக் கொண்டு, 'ஊழலை ஒழிப்போம்' என்கிறார் முதல்வர். முன்னாள் முதல்வர் ஸ்டாலின், சென்னை கொளத்துார் தொகுதிக்கு நிறைய செய்துள்ளார்; அவர் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஸ்டாலினை ஏமாற்றிய கொளத்துார் தொகுதி மக்கள் நன்றி கெட்டவர்கள். தே.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறிட்ட நீங்க, அடுத்து தி.மு.க., கூட்டணிக்கு தாவ, 'துண்டு' போடுறீங்களோ?
பா.ஜ., தமிழக பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: நேபாள வெள்ள நிவாரணத்திற்காக, மத்திய அரசு சார்பில் உடனடி மீட்புக் குழுக்கள், ராணுவ ஹெலிகாப்டர்களை அனுப்பினார், நம் பிரதமர் மோடி. அங்கு சிக்கிய இந்தியர்கள், குறிப்பாக தமிழர்களை மீட்க தனி கட்டுப்பாட்டு அறை அமைத்து, மருந்துகள், உணவு பொருட்கள், குடிநீர் என, மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி. 'இந்தியா முதலில்' என்பதோடு, 'அண்டை நாடு கள் முதலில்' என்ற கொள்கை யையும் கடைப்பிடிக்கும் மோடியின் மனிதநேய நடவடிக்கை, உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை மேலும் உயர்த்தியுள்ளது.
வெளிநாடுகளில் மோடியின் செல்வாக்கு உயர்ந்துட்டே போனாலும், உள்நாட்டில் எதிர்க்கட்சியினர் காதுகளில் புகை தான் வருது!
தி.மு.க.,வைச் சேர்ந்தவரும், தமிழக சட்டசபை முன்னாள் சபாநாயகருமான அப்பாவு பேட்டி: த.வெ.க., ஆட்சி அமைந்த, 120 நாட்களில் தமிழகத்தில் போதைப் பொருட்கள் கடத்தல் அதிகரித்துள்ளது; நாளுக்கு நாள் பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றன. தி.மு.க., ஆட்சியில் கட்டுப்படுத்தப்பட்டிருந்த போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. த.வெ.க.,வினர் பள்ளி, கல்லுாரிகளை குறி வைத்து போதைப் பொருள் விற்பனை செய்வதை, அரசு தடுக்காதது ஏன்? மாணவ சமுதாயம் அழிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
தி.மு.க., ஆட்சியிலும் போதைப் பொருட்கள் புழக்கம் இருந்துச்சே... இதில் ஈடுபட்ட ஜாபர் சாதிக், உங்க கட்சியில் முக்கிய பதவியிலும் இருந்தார் என்பதை மறந்துட்டீங்களோ?
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி பேச்சு:
முதல்வர் விஜய், சட்டம் -- ஒழுங்கை பாதுகாக்கவும், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகளை தடுக்க செய்ய இருப்பது குறித்தும், என்ன பேசப் போகிறார் என அறிய அனைவரும் காத்திருந்தோம். ஆனால், அவர் அது குறித்து சட்டசபையில் எதுவும் பேசவில்லை. முதல்வர் விஜய் இன்னும் தன்னை முதல்வராகவே உணரவில்லை; அவரது பேச்சு, சினிமா பாணியில் உள்ளது.
முதல்வர் விஜயின் சட்டசபை பேச்சை, பல லட்சம் பேர் சமூக வலைதளங்கள்ல தேடித் தேடி பார்த்துட்டு இருக்காங்க தெரியுமா?
