PUBLISHED ON : செப் 11, 2026 01:54 AM

த.வெ.க.,வைச் சேர்ந்தவரும், தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவருமான கு.ப.கிருஷ்ணன் அறிக்கை:
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, என் மீது ஈ.டி., வழக்கு இல்லையா என்று கேட்டுள்ளார். நீங்கள் அரசியல் ஆண்மை உள்ளவராக இருந்தால், என் மீது ஈ.டி., வழக்கு உள்ளதை நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபித்து விட்டால், நான் அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்கிறேன். என் மீது, பொய்யான குற்றச்சாட்டுகளை உதயநிதி கூறியுள்ளார்; என் மீது எந்த வழக்கும் நிலுவையில் இல்லை.
'பொய் குற்றச்சாட்டுகளை கூறிய உதயநிதி, அரசியலில் இருந்து விலகுவாரா'ன்னு கேட்காம விட்டுட்டீங்களே!
தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை: மயக்கத்தில் இழைத்த மாபாதகத்திற்கு பிராயச்சித்தம் தேடவும், ஆளத் தெரியாத மக்குகளின் தலையில், ஓங்கி குட்டு வைத்து திருத்தவும், வலிய வந்து கிடைத்திருக்கும் தாராள வாய்ப்பாக தாராபுரத்தையும், மகத்தான சந்தர்ப்பமாக மதுராந்தகத்தையும், மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
த.வெ.க.,வை எதிர்த்து, தி.மு.க., - அ.தி.மு.க., - நாம் தமிழர் கட்சிகளும் போட்டி போடுதே... பிராயச்சித்தம் தேடுற மக்கள், உங்க கட்சியை தவிர்த்து மற்ற கட்சிகளுக்கு ஓட்டு போட்டுட்டா என்னாகும்?
அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் உதயகுமார் அறிக்கை: த.வெ.க., அரசின் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் முந்திரி கொட்டையாக முந்தி, சட்டசபையில் அறிவிக்கப்படாத முதல்வர்களாக செயல்பட்டனர். சட்டசபை மாண்பை மறந்து, மல்யுத்த மன்றமாக, த.வெ.க.,வை மாற்றியது தான் சட்டசபையின் சாதனை. வரும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவர்.
பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க., 10 தோல்விகளை சந்திச்சிருக்கு... இடைத்தேர்தலிலும் சறுக்கிட்டா, '11வது தோல்வி பழனிசாமி' என்ற பட்டத்தை சுமக்க வேண்டியிருக்குமே!
தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி: தேனி மாவட்டம், மேகமலை பகுதியில் 118 குடும்பங்கள் வசிக்கின்றன. 'வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ், அங்குள்ள மக்களை வெளியேற்ற வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பின் அடிப்படை காரணம், த.வெ.க., அரசின் கையாலாகாத்தனம். ஆனால், எதற்கு எடுத்தாலும் தி.மு.க., மீது பழி போடுவதை த.வெ.க., கொள்கையாக வைத்துள்ளது. சினிமா பாணியில் வழக்கை நடத்தியதால் இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. மேகமலை பிரச்னைக்கு முழு பொறுப்பு விஜய் அரசு தான்.
மேகமலை பிரச்னை இப்ப முளைச்சதா என்ன...? உங்க ஆட்சியிலயே சரியான நடவடிக்கை எடுத்திருந்தா, இந்த அளவுக்கு போயிருக்காதே!
