PUBLISHED ON : செப் 12, 2026 02:23 AM

திராவிட வெற்றிக் கழகம் என்ற கட்சியின் தலைவர் மல்லை சத்யா அறிக்கை:
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மதுராந்தகம் தொகுதியில் உள்ள அண்ணாதுரை, ஈ.வெ.ரா., சிலைகள் திரை போட்டு மூடப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. காலில் பட்ட காயத்திற்கு தலையில் கட்டு போடுவது போல உள்ளது, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள். இடைத்தேர்தலை காரணம் காட்டி, அடுத்த சில நாட்களில் பிறந்த நாள் விழா நடக்கவுள்ள தலைவர்களின் பேனர்களை, செங்கல்பட்டு மாவட்டத்தில் அகற்றுவதை தவிர்க்க வேண்டும்.
'டிவி'க்களில் தினமும் காட்டப்படும் எம்.ஜி.ஆர்., - ஜெ., - விஜய் படங்களை பார்த்து, யாரும் ஓட்டு போட மாட்டாங்களா என்ன? சிலைகளை மூடும் நடவடிக்கை எல்லாம் ரொம்பவே அபத்தமானது!
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக்குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை:
'செவிலியர்களின் கோரிக்கையை ஏற்று, முதல் கட்டமாக 2,500 செவிலியர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு, தற்போதைய தொகுப்பூதியத்தில் இருந்து காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்படுவர்' என, த.வெ.க., அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். அதுபோல, அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவும், அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
செவிலியர்கள் பிரச்னையை தானே தீர்த்திருக்காரு... அடுத்து, உங்க பக்கமும் கண்டிப்பா அருண்ராஜ் வருவார்!
பா.ஜ., தமிழக பொதுச்செயலர் வினோஜ் செல்வம் அறிக்கை:
'விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக அமைக்கப்படும் அனைத்து பந்தல்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும்' என, ஆந்திர மாநில அரசு அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்; பாராட்டுகிறேன்.
தமிழக அரசும் இதேபோல அறிவிக்க வேண்டும் என, நிச்சயமாக எதிர்பார்க்க மாட்டேன். கடந்த காலங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு, முந்தைய தி.மு.க., அரசு விதித்த கெடுபிடிகள், நெருக்கடிகளை, இப்போதைய த.வெ.க., அரசு பின்பற்றாமல் இருந்தாலே போதுமானது.
தி.மு.க., ஆட்சி தந்த நெருக்கடிகளை, த.வெ.க., அரசு தராது என்பதை நீங்க உறுதியாக நம்பலாம்!
பா.ஜ., விவசாய அணியின் தமிழக தலைவர் ஜி.கே.நாகராஜ் பேச்சு:
நான் ஒரு கிறிஸ்துவராக இருந்தால், சட்டை பையில் பணமின்றி சர்ச்சுக்கு செல்லலாம். நான் ஒரு முஸ்லிமாக இருந்தால், பணமின்றி மசூதிக்கு செல்லலாம்.
ஆனால், நான் ஒரு ஹிந்துவாக இருப்பதால், பணமில்லாமல் கோவிலுக்குள் செல்ல முடியாது. மொபைல் போனை பாதுகாப்பாக வைப்பது முதல் அர்ச்சனை செய்வது வரை, சிறப்பு வழியில் செல்ல பணம் அவசியம் தேவை. ஏழைகள் கோவிலுக்கு செல்வதை தடுக்க நினைக்கிறதா த.வெ.க., அரசு?
எதை, எதையோ இலவசமா தர்ற அரசு, 'கோவிலில் எல்லாம் இலவசம்'னு அறிவிக்க மாட்டேங்குதே!
