PUBLISHED ON : செப் 18, 2026 01:54 AM

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேச்சு:
இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிடுவதால், த.வெ.க., கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை; த.வெ.க., வேட்பாளர்கள் தான் வெற்றி பெறுவர். ஸ்டாலின், 'மிசா'வில் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து, நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை.
தி.மு.க., கூட்டணியில் நீங்க இருந்தப்ப, 'மிசாவில் ஸ்டாலினை கைது பண்ணி, சிறையில் கடுமையாக சித்ரவதை செய்தனர்' என்று, பல மேடைகள்ல நீங்க ஆவேசமா முழங்கியது எல்லாம் நடிப்பா?
த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் பேட்டி:
இடைத்தேர்தலில், நடிகர் அஜித் ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என்பதற்காக, லண்டனில் அஜித்தை முதல்வர் விஜய் சந்திக்கவில்லை. மோட்டார் ரேஸை மேம்படுத்துவது தொடர்பாக, முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவித்திருந்தார். அதற்கும், இதற்கும் முடிச்சு போட வேண்டாம். தி.மு.க., ஆட்சியில் உதயநிதி, சென்னை மவுன்ட் ரோட்டை சுற்றித் தான் கார் பந்தயம் நடத்தினார்; ஆனால், முதல்வர் விஜய், மோட்டார் ரேஸ் அரங்கையே கொண்டு வரப்போகிறார்.
ஆளுங்கட்சியினர் இப்ப ஒரு துரும்பை துாக்கி போட்டாலும், இடைத்தேர்தலுடன் தான் முடிச்சு போடுவாங்க!
மா.கம்யூ., தமிழக செயலர் சண்முகம் பேட்டி:
இந்த இடைத்தேர்தல், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தல் அல்ல. பார்லிமென்ட் தேர்தலில், பா.ஜ.,வை வீழ்த்த வேண்டும் என்ற முறையில் எங்கள் தேர்தல் யுக்தி இருக்கும்.
த.வெ.க., ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. விரலில் மை காய்வதற்குள் ராஜினாமா செய்து மக்களுக்கு துரோகம் செய்த த.வெ.க., வேட்பாளர்களுக்கு, ஏன் ஓட்டு போடக்கூடாது என்பதை மக்களிடம் எடுத்து வைப்போம்.
'மக்களுக்கு துரோகம் செய்தவங்களை சேர்த்துக்கிட்ட த.வெ.க., அரசுக்கு, நீங்க ஏன் ஆதரவு தர்றீங்க'ன்னு வாக்காளர்கள் திருப்பிக் கேட்டா, என்ன பதில் சொல்வீங்க?
ம.தி.மு.க., முன்னாள் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி பேச்சு:
வைகோவை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது; நல்ல நிலையில் இருக்க வேண்டியவர், அவராகவே அதை கெடுத்துக் கொண்டார். தி.மு.க.,வை விட்டு என்ன காரணத்திற்காக அவர் வெளியே வந்தாரோ, அதே தவறை தற்போதும் செய்துள்ளார். யாரையாவது புகழ வேண்டுமானால், அளவில்லாமல் புகழ்வார்; திட்ட வேண்டும் என்றால் அளவில்லாமல் திட்டுவார்; உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டு மன்னிப்பு கேட்பார்.
இதை பற்றி எல்லாம் வைகோவிடம் யாராவது கேள்வி கேட்டால், 'அது தானே கூட்டணி தர்மம்'னு அரை மணி நேரத்துக்கு பாடமும் எடுப்பாரே!
