PUBLISHED ON : செப் 21, 2026 01:10 AM

ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ பேச்சு:
அடுத்து வரும் காலங்களில், பா.ஜ.,வுக்கு நேரடியாகக்கூட தி.மு.க., ஆதரவு கொடுக்கலாம். பா.ஜ.,வை எதிர்க்கும் காங்கிரசை பலவீனப்படுத்தும் முயற்சியில் தி.மு.க., ஈடுபட்டுள்ளது. தொகுதி மறுவரையறை விவகாரத்தில், பா.ஜ.,வுக்கு தி.மு.க., ஆதரவு கொடுக்கப் போகிறது. காங்கிரஸ் இல்லாத மாற்று அணியை உருவாக்கி, பா.ஜ.,வை எதிர்க்கும், 'இண்டி' கூட்டணியை வலுவிழக்கச் செய்யும் முயற்சி நடக்கிறது.
'கடந்த 2009ல் நடந்த இலங்கை போரில், விடுதலைப் புலிகள் வீழ்ச்சிக்கு காரணமான காங்கிரசை கருவறுப்பதே என் கடமை'ன்னு உங்க தந்தை வைகோ முழங்கினாரே... அதை எல்லாம் இப்ப நீங்க மறந்துட்ட மாதிரி, பா.ஜ., மீதான எதிர்ப்பையும் தி.மு.க., மறந்து, அவங்களுடன் உறவாடப் போகுதோ?
தி.மு.க.,வைச் சேர்ந்த, அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகன் பேச்சு:
தி.மு.க., முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனையிடுவது, வழக்கமாக நடப்பது தான்; எங்களுக்கு இது ஒன்றும் புதில்ல. இது மாதிரி பல சோதனைகளை பார்த்து விட்டோம். 'மிசா, பொடா, தடா' என எல்லாவற்றையும் பார்த்த கட்சி தி.மு.க., தான். எங்களை எல்லாம் ஒண்ணுமே பண்ண முடியாது.
இந்த அளவுக்கு தன்னம்பிக்கையா இருக்கீங்களே... 'நாங்க எந்த தப்புமே பண்ணலை'ன்னு சொல்ல வர்றீங்களா அல்லது, 'தப்பு செஞ்சிட்டு, அதற்கான எந்த தடயத்தையும் விட்டு வைக்கலை'ன்னு சொல்ல வர்றீங்களா?
வி.சி.க.,வைச் சேர்ந்த, தமிழக சமூக நீதி துறை அமைச்சர் வன்னியரசு பேட்டி:
பா.ஜ., வுடன் கடந்த காலங்களில் தே.மு.தி.க., இணைந்து செயல்பட்டுள்ளது. யாருடன் கூட்டணி என, இரு பக்கமும் கடைசி வரை பேரம் பேசியவர்கள் தான் தே.மு.தி.க., தலைவர்கள்.
ஒரே ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக, தி.மு.க., கூட்டணிக்கு வந்தவர் பிரேமலதா. எங்களை பார்த்து குறை சொல்வதற்கு, அவருக்கு எந்த தகுதியும் இல்லை.
உங்க தலைவர் திருமாவளவனே, 'தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா விமர்சனத்துக்கு பதிலளிக்க விரும்பலை'ன்னு ஒதுங்கிட்டாரே... அதன் பிறகும் நீங்க ஏன் கொந்தளிக்கிறீங்க?
தி.மு.க., முதன்மை செயலரும், எம்.எல்.ஏ.,வுமான நேரு பேட்டி:
'என் தந்தை வைகோ கோபக்காரர். அவராலும், என்னாலும் ம.தி.மு.க.,வை நடத்த முடியாது. நான் தி.மு.க.,வுடன் வந்து விடுகிறேன்' என்று என்னிடம் சொன்னவர் தான், ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ.
அதுக்கு பதிலடியா, 'கருணாநிதியுடன் தி.மு.க., முடிந்து விட்டது'ன்னு நீங்க சொன்னதா துரை வைகோ குற்றஞ்சாட்டியிருக்காரே... அதுக்கு உங்களிடம் இருந்து எந்த பதிலையும் காணோமே!
