PUBLISHED ON : செப் 30, 2026 12:00 AM

பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் பேட்டி:
அ.தி.மு.க.,வில் எம்.எல்.ஏ.,க்களாக வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர், ஒரு மாதம் கூட எம்.எல்.ஏ.,வாக பதவி வகிக்காமல் ராஜினாமா செய்து, மக்களை ஏமாற்றியுள்ளனர். இருவரும் தற்போது த.வெ.க., சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது. இதை மீறி ஆளுங்கட்சி, தன் அதிகாரத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றால், அது உண்மையான வெற்றியாக இருக்காது. த.வெ.க., வேட்பாளர்கள் வெற்றி பெறக் கூடாது என்பது பா.ஜ.,வின் நிலைப்பாடு; இதற்காக கடுமையாக உழைக்கிறோம்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மட்டும் தான் ரெண்டு தொகுதிகளிலும் சுத்தி சுத்தி வர்றாரு... உங்க கட்சியின் தமிழக தலைவர் நயினார் நாகேந்திரனை காணவே இல்லையே!
இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து அறிக்கை:
வரும் அக்டோபர் முதல், ஆறு மாதங்களுக்கு மின் கணக்கீட்டு பணிகளை, தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல. இப்பணி, கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையோடு நேரடியாக தொடர்புடைய முக்கிய பணி. எனவே, இந்த முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து, காலியாக உள்ள கணக்கீட்டாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
'மின் கணக்கீட்டில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடக்குது'ன்னு பொதுமக்கள் புலம்பிட்டு இருக்கிற சூழலில், இப்பணியை தனியாரிடம் தாரைவார்ப்பது, கூடுதல் குழப்பங்களுக்கு தான் வழிவகுக்கும்! காங்கிரசைச் சேர்ந்த, சிவகங்கை எம்.பி., கார்த்தி பேட்டி: த.வெ.க., அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. முதல்வர் விஜய்க்கு மக்களிடம் நற்பெயர் உள்ளது. இது, இடைத்தேர்தலில் பிரதிபலிக்கும்.
இடதுசாரிகள் வெற்றி பெறுவதற்காக இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை; அரசியல் செய்வதற்காகவே போட்டியிடுகின்றனர்.
அது சரி... வெட்டியா பொழுதை போக்க வேண்டாம்னு தான், இடைத்தேர்தல் களத்தில் இடதுசாரிகள் குதிச்சிருக்காங்களோ?
மா.கம்யூ., தமிழக செயலர் சண்முகம் அறிக்கை:
தமிழகத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் மற்றும் பிற பொது நிறுவனங்களின் பெயர்களில் உள்ள ஜாதி பெயர்களை நீக்குவது தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு ஏற்கனவே உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறோம்.
ஆம்... தலைவர்கள் எல்லாம் தியாகத்தால் நினைவுகூரப்பட வேண்டுமே தவிர, அவர்களது ஜாதியால் அல்ல!
