PUBLISHED ON : ஜன 16, 2024 12:00 AM

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேச்சு: எனக்கு தனிக்கட்சி துவங்கும் எண்ணம் துளியும் இல்லை. கட்சியை தீயவர்களிடமிருந்து மீட்பதே இலக்கு. சசிகலா, தினகரன், நான் ஒருங்கிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என, தொண்டர்கள் விரும்புகின்றனர். பழனிசாமி அவராகவே பொதுச்செயலர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஜனநாயக முறைப்படி, கட்சித்தேர்தல் நடத்தினால் உண்மை நிலை தெரியும்.எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கூற்றுப்படி, பழனிசாமிக்கு எதிரா மூணு பேரும் சேர்ந்திருக்கீங்க... வேற ஒண்ணும் நடக்கும்னு தோணல!
பா.ம.க., தலைவர் அன்புமணி பேட்டி: தமிழக அரசு உடனடியாக, ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அப்படி நடத்தினால் தான், உண்மையான வளர்ச்சி ஏற்படும். நாங்கள் யாருடன் கூட்டணி என்பதை பின்னர் அறிவிப்போம். ஜாதிவாரி கணக்கெடுப்புக்கும், கூட்டணிக்கும் சம்பந்தமில்லை. கணக்கெடுப்புக்கும், கூட்டணிக்கும் சம்பந்தமில்லைனு சொல்லி, தி.மு.க.,வோடு கூட்டணி பேச்சு நடப்பதை உறுதி செஞ்சிட்டாரே!
த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: தமிழக அரசு, சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டை முறையாக மதிப்பிட வேண்டும். அதாவது, அரசு சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டில், 33 சதவீதம் உயர்த்தியது நியாயமில்லை. மாநிலத்தில் சொத்துக்களை வழிகாட்டி மதிப்பீடு செய்யும் முறை அரசுக்கு உண்டு. இருப்பினும், பொதுமக்களின் சிரமத்தை அறிந்து, கருத்து கேட்டு, மதிப்பீடு செய்திருக்க வேண்டும். சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டில், 2017ல் பின்பற்றப்பட்ட முறையையே பின்பற்ற வேண்டும்.மக்கள் கருத்தை எல்லாம் கேட்டா, எதுக்காச்சும் கட்டணத்தை ஏத்த, ஒத்துக்குவாங்களா என்ன?
இந்திய சுற்றுலா துறையின் தென் மண்டல இயக்குனர் வெங்கடேசன் பேட்டி: 'சுதேசி தர்ஷன்' திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மாமல்லபுரம், நீலகிரியில், மத்திய அரசின் நிதியின் கீழ் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்த உள்ளோம். வேளாங்கண்ணி, காஞ்சிபுரத்தில் ஏற்கனவே நிதி செலவிடப்பட்டுள்ளது. அடுத்ததாக, கும்பகோணத்தை சுற்றியுள்ள ஒன்பது கோவில்களை ஒருங்கிணைத்து, 'நவக்கிரகா' திட்டத்திற்கான உள்கட்டமைப்பை உருவாக்க உள்ளோம்.தமிழக சுற்றுலா துறை தான், நம்மூர் சுற்றுலாவை மேம்படுத்தாமல் துாங்குது; மத்திய சுற்றுலா துறையாவது உருப்படியா ஏதாச்சும் செய்யட்டும்!