PUBLISHED ON : செப் 07, 2024 12:00 AM

ஹெச்.ஐ.வி., பாதித்த பெண்களுக்காக கடைசி வரை வேலை செய்வேன்!
ஹெச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக, 'பாசிட்டிவ் வுமன் நெட்வொர்க்' அமைப்பை நிறுவிய
துடன், தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகத்தின் நிர்வாக குழு உறுப்பினராகவும் உள்ள கவுசல்யா:
நாமக்கல் மாவட்டத்தில் இருக்கிற போடி நாயக்கன்பட்டி என்ற குக்கிராமம் தான் பூர்வீகம். என் சிறு வயதில் அம்மா இறந்து விட்டதால், அப்பா மறுமணம் செய்து கொண்டார். சித்தி கொடுமைகளை தாங்க முடியாமல், 5 வயதில் பாட்டி வீட்டுக்கு வந்து விட்டேன்.
பிளஸ் 2 வரை தான் படித்தேன். என் விருப்பத்தை மீறி, 1995ல் உறவினருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். கணவர் லாரி டிரைவர்; பொறுப்பில்லாத சுயநலவாதி.
கணவருக்கு ஏற்கனவே ஹெச்.ஐ.வி., பாதிப்பு இருந்ததால், இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். அதை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டார்.
திருமணமான ஒரே மாதத்தில் என் உடல்நிலை மோசமானது. அப்போது தான் கணவருக்கு எய்ட்ஸ் இருப்பது தெரியவந்தது. அதன்பின், திருமண வாழ்க்கையில் இருந்து விலகினேன்.
மருத்துவர்களுக்கே எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு இல்லாத போது, அந்த காலத்தில் என்னைப் போன்ற சாமானியரின் அறியாமையை சொல்லவா வேண்டும். போலி மருத்துவர்களை நம்பி பணத்தை இழந்தேன். பாதிக்கப்பட்டோருக்கான தீர்வை தேடி, 1997ல் இந்த அமைப்பை ஆரம்பித்தோம்.
இந்நோய் பாதித்தோருக்கு தமிழக அரசு முன்னெடுக்கும் திட்டங்களில் பாதிக்கப்பட்ட பெண்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கும், அரசுக்கும் இணைப்பு பாலமாகவும் எங்கள் அமைப்பு செயல்படுது.
மேலும், ஹெச்.ஐ.வி., பாதித்தோரின் உடல்நலம், அவங்களோட உளவியல், சமூக மற்றும் தனிப்பட்ட சிக்கல்கள் குறித்து கள ஆய்வுகள் செய்து, மத்திய மற்றும் தமிழக அரசுக்கு கொடுத்து வருகிறோம். அந்த வேலைக்காக அரசின் நிதியுதவி கிடைக்கிறது.
எங்கள் வேலைக்கு சொற்ப ஊதியம் கிடைத்தாலும், அதில் தான் எங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறோம். எய்ட்ஸ் குறித்த எதிர்மறையான பிம்பங்கள் இன்னும் மாறவில்லை. அதற்கு நாங்கள் படும் இன்னல்களே கண்
கூடான சான்று.சென்னை, அரும்பாக்கத்தில் தான் அமைப்பை நடத்தி வருகிறோம். இங்கு பாதிக்கப்பட்டோர் வந்து செல்வதால், இந்த கட்டடத்தை காலி செய்ய சொல்லி விட்டனர்.
நாங்கள் உரிய வாடகை அல்லது குத்தகை பணம் கொடுத்து தான் அலுவலகம் கேட்கிறோம். பலரும் எங்களை ஒதுக்குகின்றனர். என் கடைசி காலம் வரை, ஹெச்.ஐ.வி., பாதித்த பெண்களின் நலனுக்காகவே வேலை செய்வேன்.
தொடர்புக்கு: 94440 35203