/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து வாழ்கிறேன்!
/
ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து வாழ்கிறேன்!
PUBLISHED ON : மே 09, 2024 12:00 AM

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள மகனை நினைத்து கவலைப்பட்டு, முடங்கி போகாமல், அவனை அழைத்து கொண்டு, 21 நாடுகளுக்கும், 26 மாநிலங்களுக்கும் பயணம் செய்துள்ள, ஓர் அசாதாரண தாயான மவுஷ்மி கபாடியா:
எனக்கு, 'பைக் வாகன ஓட்டி, சாகச விரும்பி, மலையேற்றக்காரர், கிராபிக் டிசைனர், தொழில் முனைவோர்' என, பல முகங்கள் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக, இரண்டு குழந்தைகளின் தாய். என் கணவர் துபாயில் பணிபுரிகிறார்.
சமீபத்தில், 6,000 கி.மீ., துாரம் கொண்ட என் பயணத்தை மோட்டார் சைக்கிள் வாயிலாக தனியே கடந்திருக்கிறேன்.
புதுடில்லி, மும்பை, கோல்கட்டா மற்றும் சென்னை நகரங்களை இணைக்கும் நாற்கர வடிவிலான பாதையை, 'கோல்டன் குவாட்ரிலேட்டரல் ஹைவே' என்பர்.
என் பயணத்தின் ஊடாக, 'கார்டங் லா பாஸ்' என்ற பகுதியை நான் கடந்தது மிகவும் குறிப்பிடத்தக்கது. அந்த பகுதி தான், உலகிலேயே மிக அதிக உயரத்தில் இருக்கும் கணவாய் பகுதியாகும்.
'சிறு வயதிலேயே எனக்கு மோட்டார் சைக்கிள் மீது அலாதி மோகம் இருந்தது. ஆனால், என் வீட்டார் தடையாக இருந்தனர். பைக் வாங்க வேண்டும்' என்ற என்னுடைய ஆசை, திருமணத்துக்கு பின், மாமியாரின் ஆசியுடன் நிறைவேறியது.
அதை ஓட்டும்போது புதிய சுதந்திர உணர்வை அடைந்தேன். என் மூத்த மகனுக்கு, 'ரிஜிட் ஸ்பைன் மஸ்குலர் டிஸ்ட்ரோபி' என்ற நோய் பிறவியிலேயே இருக்கிறது.
கழுத்தில் தலை சரியாக நிற்காது, தசைகள் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும், முதுகுத் தண்டுவடமும் ஒரு பக்கமாக வளைந்திருந்தது. தவிர, நிமோனியா காய்ச்சலும் அடிக்கடி வந்துவிடும்.
சுவாசிப்பதிலும் கூட சிக்கல் உண்டு. ஆனாலும், நான் மனம் தளரவில்லை. மகனுக்கு சிகிச்சை அளித்தபடியே, உலகின் பல நாடுகளுக்கும் சுற்றுலா சென்று வருகிறேன்.
நான் மிகச் சிறந்த தாயாகவும் இருக்க வேண்டும் என்பதில் மிக உறுதியோடு இருக்கிறேன். இதுவரை, 21 நாடுகளுக்கு என் மகனுடன் சுற்றுலா சென்று வந்திருக்கிறேன். 26 மாநிலங்களை சுற்றியிருக்கிறேன். 15 முறை மோட்டார் சைக்கிளில் மிக நீண்ட பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன். 12 மலையேற்ற பயணங்களும் வெற்றிகரமாக செய்திருக்கிறேன்.
கடந்த 2013-ல், சொந்தமாக மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கினேன். தனியே நெடுந்துார பயணங்களை, அதில் மேற்கொண்டேன்.
தொழில் முறை புகைப்பட கலைஞராகவும் ஆனேன். நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொடுக்கும் நிறுவனம் ஒன்றையும் வெற்றிகரமாக நடத்த துவங்கினேன்.
மகனுடைய நோயால் மனம் தளர்ந்து விடவில்லை. 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற நோக்கத்துடனும், மிகுந்த உற்சாகத்துடனும் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து வாழ்கிறேன்.