/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
ஸ்ட்ராபெர்ரி விளைச்சலில் நல்ல லாபம்!
/
ஸ்ட்ராபெர்ரி விளைச்சலில் நல்ல லாபம்!
PUBLISHED ON : ஜூலை 01, 2024 12:00 AM

கடந்த ஐந்து ஆண்டுகளாக, இயற்கை முறையில் ஸ்ட்ராபெர்ரி சாகுபடி செய்து வருவது பற்றி கூறும், கோத்தகிரியிலிருந்து, 14 கி.மீ.,யில் உள்ள கூக்கல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கண்ணன்:
நீலகிரி மாவட்டம், குன்னுார் தான் என் பூர்வீகம். அப்பா மத்திய அரசு பணியில் இருந்தார். நான், பி.எஸ்சி., தாவரவியல் பட்டப் படிப்பு படிச்சதுனாலயும், விவசாயம் சார்ந்த தொண்டு நிறுவனம் ஒன்றில் பல ஆண்டுகள் வேலை பார்த்ததுனாலயும், எனக்கு விவசாயத்தில் ஆர்வம் ஏற்பட்டது. 1 ஏக்கர் குத்தகை நிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக விவசாயம் செய்கிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் இருந்து தாய் செடிகளை வாங்கி வந்து, அதில் இருந்து தரமான நாற்றுகள் உற்பத்தி செய்து, நடவு செய்வேன். என்னோட அனுபவத்தில், ஸ்ட்ராபெர்ரியை ஓராண்டு பயிராக வளர்க்கிறது தான் சிறப்பு.
ஸ்ட்ராபெர்ரி நாற்றுகள் நடவு செய்ய, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் ஏற்ற காலம். நடவு செய்ததிலிருந்து, அடுத்த 3 -- 4 மாதத்தில் பழங்கள் அறுவடைக்கு வர துவங்கும்; மொத்தம் ஒன்பது மாதங்கள் பழங்கள் கிடைக்கும். தினமும் அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்புவோம்.
ஒவ்வொரு செடியில் இருந்தும், 600 -- 700 கிராம் பழங்கள் கிடைக்கும். சராசரியாக, 650 கிராம் பழங்கள் கிடைக்கிறது என கணக்கு போட்டாலும், மொத்தமுள்ள 22,000 செடிகளில் இருந்து, 14,300 கிலோ பழங்கள் கிடைக்கும்.
என்னோட தோட்டத்தில் விளையக்கூடிய பழங்களை, கோவையில் உள்ள மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்கிறேன். 1 கிலோவுக்கு குறைந்தபட்சம், 200 ரூபாயில் இருந்து, அதிகபட்சம் 300 ரூபாய் வரைக்கும் விலை கிடைக்கும். 14,300 கிலோ ஸ்ட்ராபெர்ரி பழங்கள் விற்பனை வாயிலாக, குறைந்தபட்சம், 28 லட்சத்து 60,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.
எரு, பலதானிய விதைப்பு, உழவு, படுக்கைகள் அமைத்தல், நாற்றுகள், நடவுக்கூலி, இடுபொருட்கள், அறுவடைக்கூலி, போக்குவரத்து உட்பட எல்லா செலவுகளும் போக, ஒரு ஆண்டிற்கு, 18 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும்.
ஸ்ட்ராபெர்ரி பழங்களை பறித்ததில் இருந்து, அதிகபட்சம் இரண்டு நாட்களுக்குள் சாப்பிட்டால் தான் சுவையாக இருக்கும். அதனால், பறித்ததுமே, 'பேக்கிங்' செய்து விற்பனைக்கு அனுப்பிடுவோம்.
நான், 7 லட்சம் ரூபாய் செலவு செய்து, பசுமைக் குடில் அமைச்சிருக்கேன். அதில், 50 சதவீதம் அரசு மானியமாக கிடைச்சது. ஒருமுறை குடில் அமைச்சுட்டோம்னா, பல ஆண்டுகளுக்கு பலன் கிடைக்கும்!
தொடர்புக்கு:
63790 73782