/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
பிரமிடுகளை புகைப்படம் எடுக்கணும்!
/
பிரமிடுகளை புகைப்படம் எடுக்கணும்!
PUBLISHED ON : மே 22, 2024 12:00 AM

ஈரோட்டை சேர்ந்த புகைப்படக் கலைஞர் திலகவதி: என் அண்ணன் ஒரு போட்டோ கிராபர். எனக்கு கேமரா அறிமுகமானதும், அதில் ஆர்வம் ஏற்பட்டதும் அவர்கிட்ட இருந்து தான்.
தமிழகத்தில் உள்ள அனைத்து குடைவரை கோவில்களையும் ஆவணப்படுத்தும் என் முயற்சியின் இறுதி படியை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்.
நான் பிறந்தது சென்னை. வளர்ந்தது, படிச்சது, திருமணம் செய்தது எல்லாம் அரக்கோணம். 20 ஆண்டுகளுக்கு முன், என் அண்ணன் என் கையில் அவரோட கேமராவை கொடுத்து, அடிப்படையான சில விஷயங்களை சொல்லி கொடுத்தார். டெக்ஸ்டைல்சில் டிப்ளமா முடிச்சதும், வீட்டில் கல்யாணம் செய்து வைத்தனர்.
ஹோம் மேக்கராக இருந்துட்டே எம்.ஏ., இங்கிலீஷ் முடிச்சதோடு, எனக்கு ரொம்ப பிடிச்ச போட்டோகிராபியில் கோர்ஸ்கள் செய்ய ஆசை வந்தது. கடந்த ஏழு ஆண்டுகளாக, புகைப்படக் கலையில் பல சான்றிதழ் படிப்புகளையும், இணையதள கோர்ஸ்களையும் கத்துட்டு வர்றேன்.
எனக்கு பொதுவாக, வாசிப்பு, வரலாறு மற்றும் கட்டட கலையின் மேல் அதிக ஆர்வம். சமூக வலைதளத்தில், நிறைய வரலாற்று ஆய்வாளர்களோட கட்டுரைகளை படித்தபோது, குடைவரை கோவில்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது.
தற்போதைய தொழில்நுட்ப சூழலில் ஒரு கட்டடம் கட்டவே நாம இவ்வளவு சிரமப்படுகிறோம். ஆனால், அந்த காலத்தில் மனித மூளையையும், உழைப்பையும் மட்டுமே நம்பி எழுப்பப்பட்ட கற்கலை, பெரும் ஆச்சர்யம். அந்த கோவில்களை எல்லாம், என்னோட கேமராவில் ஆவணப்படுத்தணும்னு ஆசைப்பட்டேன்.
இதுவரை, 80 கோவில்கள் வரை ஆவணப்படுத்தியிருக்கேன். நான் எடுத்த புகைப்படங்களை என் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட, நிறைய பாராட்டுகளும், ஆயிரக்கணக்கான பாலோயர்ஸும் கிடைச்சாங்க.
துவக்கத்தில், இதுக்காக நான் தமிழகம் முழுக்க பயணம் செய்றதை வீட்டில் விரும்பவில்லை. ஆனால், அதன் வாயிலாக எனக்கு கிடைத்த அடையாளம், அங்கீகாரம் பார்த்துட்டு இப்போது என்னை ஊக்கப்படுத்துகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை 1,500 ஆண்டுகளுக்கு முன், மன்னர்கள் காலத்தில் குடைவரை கோவில் கட்டடக் கலை துவங்கியிருக்கும். பாண்டியர்கள், பல்லவர்கள் என, பலரும் பங்களிச்சிருக்காங்க.
ஒரு பாறையை யானையாக மாற்றலாம், தேராக மாற்றலாம்னு அவங்க அந்த காலத்தில் யோசிச்சதே வியப்பு தான். மாமல்லபுரம், அவங்களோட கலைக்கு சான்றாக இன்றளவும் நிற்கிறது.
அடுத்து, இந்தியா முழுதும் இருக்கும் குடைவரைகளை ஆவணப்படுத்தணும். அப்புறம், எகிப்து நாட்டில் இருக்கும் பிரமிடு களை புகைப்படம் எடுக்கணும்!

