/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
இயற்கை அங்காடியில் மாதம் ரூ.1 லட்சம்!
/
இயற்கை அங்காடியில் மாதம் ரூ.1 லட்சம்!
PUBLISHED ON : மார் 29, 2024 12:00 AM

இயற்கை முறையில் விளைந்த பொருட்களை, 'ஆரண்யா பசுமை குடில்' என்ற கடை வாயிலாக மதிப்பு கூட்டி விற்பனை செய்து வரும், சேலம், குரங்குச்சாவடி பகுதியை சேர்ந்த அல்லி: என்னோட பூர்வீகம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை அடிவாரமான தொப்பப்பட்டி கிராமம்.
என்னோட தாத்தா, அப்பா, அண்ணன்கள் உட்பட அனைவருமே விவசாயிகள் தான். நான் பிளஸ் 2 வரை படிச்சிருக்கேன். சிறு வயது முதலே விவசாயத்தில் ஆர்வம் உண்டு. திருமணம் ஆனதும் சேலத்துக்கு வந்து விட்டேன்.
குரங்குச்சாவடி பகுதியில் டெய்லர் கடை ஒன்றை நடத்தி வந்தேன். எங்கள் தோட்டத்தில் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் மஞ்சளை வாங்கி வந்து, விரலி மஞ்சளாகவும், மஞ்சள் துாளாகவும் மதிப்பு கூட்டி, என்னோட கடையிலேயே வைத்து விற்பனை செய்ய துவங்கினேன். தரமாக இருந்ததால், மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது.
என் தாத்தா, நாட்டு வைத்தியர். அவர் மூலிகைகளில் மருந்துகள் தயார் செய்து, நோயாளிகளுக்கு கொடுப்பார். அதனால், மூலிகைகள் சார்ந்த ஒரு தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ரொம்ப நாளாகவே இருந்தது.
இயற்கை அங்காடி ஒன்றை துவங்கி, நம் தோட்டத்தில் விளையும் மஞ்சள், மூலிகைகள் உள்ளிட்ட பொருட்களை மதிப்புக்கூட்டி அங்கு விற்பனை செய்யலாம் என்று ஆசைப்பட்டேன்.
இயற்கை அங்காடி எனில், கண்டிப்பாக இயற்கையோடு இயைந்ததா இருக்கணும் என தீர்மானித்து, கீற்றுக் கொட்டகை, பனை மரத்தால் செய்யப்பட்ட துாண்கள், சிமென்ட் பூச்சு இல்லாத செங்கல் சுவர்கள், பழங்கால ஓடுகள் பதிக்கப்பட்ட தரை உள்ளிட்ட பழமையான அம்சங்களுடன், குடில் பாணியில் இதை கட்டமைத்து, 'ஆரண்யா பசுமை குடில்' என்ற பெயரில் ஆரம்பித்தேன்.
மூலிகை சூப் ரெடிமிக்ஸ், 25 வகையில் தயார் செய்து விற்பனை செய்கிறேன். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய மஞ்சள் ஊட்டச்சத்து பானம் ரெடிமிக்ஸ் உள்ளிட்ட பொருட்களை தயார் செய்து விற்பனை செய்கிறேன்.
இந்த அங்காடிக்கு நேரடியாக வந்து பொருட்கள் வாங்கக்கூடிய நிரந்தர வாடிக்கையாளர்கள் பலர் உள்ளனர்.
இது தவிர, சமூக வலைதளங்கள் வாயிலாக வெளியிடக்கூடிய விளம்பரங்களை பார்த்தும் பொருட்கள் வாங்குகின்றனர். ஒரு மாதத்திற்கு எல்லா செலவுகளும் போக, 80,000 முதல், 1 லட்சம் ரூபாய் வரைக்கும் இந்த அங்காடி வாயிலாக லாபம் கிடைக்கிறது.
மாடித்தோட்டம் அமைப்பதற்கான பயிற்சி, இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சி, மேட்டுப்பாத்தி, இருமடிப்பாத்தி அமைக்குறதுக்கான பயிற்சிகளும் அளிக்கிறேன். அதன் வாயிலாகவும் வருமானம் கிடைக்கிறது.
தொடர்புக்கு - 96008 00221.

