/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
9 மணி நேரம் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வேன்!
/
9 மணி நேரம் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வேன்!
PUBLISHED ON : செப் 16, 2024 12:00 AM

இந்திய தடகள வீராங்கனைகளில், குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியுள்ள ஷைனி வில்சன்: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தொடுபுழா தான் என் சொந்த ஊர். 1984ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி தடகளப் பிரிவில், அரை இறுதிக்கு தேர்வான முதல் இந்திய வீராங்கனை நான் தான்.
இந்தியா சார்பில், 75க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். ஏழு தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளேன்.
இவற்றில் மொத்தம், 18 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளேன். நான்கு உலக கோப்பை போட்டிகளில் ஆசியாவின் பிரதிநிதியாக பங்கேற்றுள்ளேன். 1985ல் துவங்கி, ஜகார்த்தாவில் தொடர்ச்சியாக ஆறு ஆசிய தடகள போட்டிகளில் பங்கு கொண்ட ஒரே தடகள வீராங்கனையும் நானே.
அந்த காலகட்டத்தில் ஏழு தங்கம், ஐந்து வெள்ளி, இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளேன். தற்போது, இந்திய அரசின் தேர்வுக்குழுவில் தேர்வாளாராக இருக்கிறேன்.
குழந்தைப் பருவத்தில் இருந்தே, தடகளப் போட்டிகளில் அதிக ஆர்வம் காண்பித்தேன். ஆரம்பத்தில் விளையாட்டுப் பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற்றேன்.
என் பள்ளி முடிந்ததும், முதல் ஆளாக வீட்டுக்கு வந்து விடுவேன். 'ஷைனிக்கு நடக்கத் தெரியாதா; எப்போதும் ஓட்டம் தானா' என்று அக்கம் பக்கத்தினர் கேலி செய்வராம்.
நான் மூன்றாம் வகுப்பு படித்த போது, ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வந்தேன். அதற்கு பரிசாக என் தாத்தா, 100 ரூபாய் கொடுத்தார்.
அந்தப் பணத்தில் வாட்ச் வாங்கி, அணிந்து மகிழ்ந்தேன். சிறுமியாய் இருக்கும் போதே தினமும் ஒன்பது மணி நேரம் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வேன்.
ஓட்டப் பந்தயம் தவிர வாலிபால், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளும் பிடிக்கும். ஆரம்பத்தில் உணவு குறித்த விழிப்புணர்வு கிடையாது.
தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற போது தான் உணவியல் நிபுணர்களின் ஆலோசனைப்படி உணவு எடுத்துக் கொள்ள துவங்கினேன்.
எனக்கு பயிற்சி அளித்தவர் பி.ஜே.தேவஸியா என்பவர் தான். அதன்பின் திருவனந்தபுரத்தில் இருக்கும் விளையாட்டு பயிற்சி பள்ளியில் சேர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டேன். அதன்பின் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றேன்.
பிரபல நீச்சல் வீரரான வில்சன் செரியனை திருமணம் செய்து கொண்டேன். என் சாதனைகளுக்காக 1985ல் அர்ஜுனா விருதும், 1996ல் பிர்லா விருதும், 1998ல் பத்மஸ்ரீ விருதும் வழங்கி மத்திய அரசு கவுரவித்திருக்கிறது.
விளையாட்டில் ஆர்வமிருக்கும் குழந்தைகள், தங்கள் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியரிடம் ஆலோசனைகள் பெற்று, அதன்படி நடப்பது நல்லது!